ராமாயணம் திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு - ஸ்ரீ ராம் லீலா மகாசங் எச்சரிக்கை..!

ரூ.4000 கோடி பட்ஜெட் ராமாயணம் படத்திற்கு சிக்கல்: திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை!
Ramayan film
Ranbir Kapoor and sai pallavi
Updated on

சமீபத்தில் வெளியான ராமாயணம் திரைப்படத்தின் டீஸர் ,சர்வதேச அளவில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்தியாவிலேயே மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வட இந்தியாவை சேர்ந்த ஒரு ஆன்மீக அமைப்பு ,இந்த திரைப்படத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்ததோடு , இந்த திரைப்படம் வெளியானால் போராட்டத்தில் இறங்குவோம், என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளில் புகழ்பெற்ற காவியமாக இராமாயணம் இருக்கிறது. தெற்காசிய நாடுகளில் ராமாயணம் மதங்களைக் கடந்து அந்த நாட்டின் பொக்கிஷமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் உருவான இந்த காவியம், பலமுறை பல மொழிகளில் திரைப்படமாக வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. திரைப்படமாக மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடராகவும் பலமுறை எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இறுதியாக பிரபாஸ் நடிப்பில் 'ஆதிபுருஷ்' என்ற பெயரில் ராமாயணம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியது.

தற்போது நிதிஷ் திவாரி இயக்கத்தில் ஏராளமான பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ராமாயணம் திரைப்படம் உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட இந்த திரைப்படத்தின் பட்ஜெட் ₹4000 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த திரைப்படத்தின் பட்ஜெட் பல பெரிய ஹாலிவுட் திரைப்படங்களின் பட்ஜெட்டை விட அதிகமாகும். இந்த திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு மட்டும் ₹1200 கோடியிலிருந்து ₹1500 கோடி வரை செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும் , ராவணன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் யாஷ்ஷும், ஹனுமான் கதாபாத்திரத்தில் சன்னி தியோலும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக இவர்கள் மூவருக்கும் மிகப்பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

விபீஷணன் கதாபாத்திரத்தில் விவேக் ஓபராயும் நடித்துள்ளார். படத்தின் சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் , இன்னொரு முக்கிய கதாபாத்திரமான சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் ரகுல்பிரித் சிங்கும் நடித்துள்ளனர். மேலும் ஆஸ்கர் விருதுகளை பெற்ற ஏ.ஆர்.ரகுமானும் , ஹான் சிம்மரும் முதன்முறையாக இணைந்து இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

Yash as Ravan
yash and rambir

இரண்டு பாகங்களாகத் தயாராகி வரும் ராமாயணத்தின் முதல் பாகம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளதாக, திரைப்பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் வெளியான ராமாயணம் திரைப்படத்தின் டீசர், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. படத்தின் காட்சி அமைப்புகள், பிரம்மாண்டம் , இசை , ஒளிப்பதிவு , கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் பெரிய பாராட்டை பெற்று வருகின்றன.

இந்த திரைப்படத்தின் ஒரு சில காட்சிகள் ஹிந்துக்களின் உணர்வை புண்படுத்துவதைப் போல இருப்பதாக , 'ஸ்ரீ ராம் லீலா மகாசங்' என்னும் ஆன்மீக அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ராமாயணம் போன்ற புராணங்களை திரைப்படமாக்கும் பொழுது, ஹிந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக புராண கதைகளை மாற்றும் வகையில் காட்சி அமைப்புகள் இருக்கக் கூடாது, என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக ஸ்ரீ ராம் லீலா மகாசங் தலைவர் அர்ஜுன் குமார், படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் நிதேஷ் திவாரிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ​"இந்துக்களின் மனதை புண்படுத்தும் காட்சிகள் இப்படத்தில் இருப்பதாக எங்களுக்குத் தகவல்கள் வந்துள்ளன. எனவே, திரைப்படத்தை வெளியிடுவதற்கு முன்பு, இந்து அமைப்புகள் மற்றும் ராம்லீலா கமிட்டி உறுப்பினர்களுக்கு திரைப்படத்தைத் காட்ட வேண்டும் , நாங்கள் சொல்லும் திருத்தங்களை ஏற்க வேண்டும். இதை மறுத்தால் திரைப்படம் வெளியாகும் பொழுது திரையரங்குகள் முன்பு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்" என்று எழுதியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
மணிரத்னம் படத்தின் ரகசிய கதை இதுதானா? ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா புதிய படம்!
Ramayan film
logo
Kalki Online
kalkionline.com