இந்தியாவின் முன்னணி பைக் டாக்ஸி சேவைகளில் ஒன்றான ரேபிடோ, தற்போது உணவு விநியோகச் சந்தையிலும் களமிறங்க தயாராகி வருகிறது. Zomato மற்றும் Swiggy போன்ற ஜாம்பவான்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த சந்தையில், ரேபிடோ தனது தனித்துவமான கட்டண அமைப்பு மற்றும் சிறிய உணவகங்களுக்கு ஆதரவான அணுகுமுறையுடன் நுழைகிறது. பெங்களூருவில் இந்த சேவைக்கான ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்க ரேபிடோ தயாராகி வருகிறது.
முதற்கட்டமாக, மெக்டொனால்ட்ஸ், கேஎஃப்சி, பிஸ்ஸா ஹட் போன்ற பெரிய உணவகச் சங்கிலிகளுடன் ரேபிடோ பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்திய தேசிய உணவகங்கள் சங்கத்துடன் (NRAI) இணைந்து புதிய விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளின்படி, ரேபிடோ உணவகங்களுக்கு 8-15% வரை மட்டுமே கமிஷன் வசூலிக்கும். இது ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ வசூலிக்கும் 16-30% கமிஷனை விட கணிசமாகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
உணவு விநியோக சேவைக்கான நிலையான கட்டண அமைப்பை உணவு விநியோக சேவைக்கான நிலையான கட்டண அமைப்பையும் ரேபிடோ வெளியிட்டுள்ளது. ₹400க்குக் குறைவான ஆர்டர்களுக்கு ₹25 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆர்டர்களுக்கு ₹50 என நிறுவனம் வசூலிக்கும். இந்த புதிய விலை நிர்ணய மாதிரி, Zomato மற்றும் Swiggy போன்ற பெரிய தளங்களால் விதிக்கப்படும். அதிக கமிஷன் விகிதங்களால் பெரும்பாலும் போராடும் சிறிய உணவகங்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த கட்டண முறை மற்றும் சிறு உணவகங்களுக்கு ஆதரவான அணுகுமுறை ஆகியவை, ரேபிடோவை வாடிக்கையாளர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களிடையே வேகமாக பிரபலமாக்கலாம். பெங்களூருவில் தொடங்கப்படும் இந்த பைலட் திட்டம், வெற்றி பெற்றால் மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கப்படலாம். ஏற்கெனவே பைக் டாக்ஸி சேவையில் பெரும் அனுபவம் கொண்ட ரேபிடோ, இந்த புதிய முயற்சியின் மூலம் உணவு விநியோகச் சந்தையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.