கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்த 'அனிமல்' திரைப்படம், எதிர்மறை விமர்சனங்களால் பெரும் சர்ச்சையை சந்தித்தது. இந்த சர்ச்சைகள் குறித்து இதுவரை மௌனம் காத்து வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, முதல்முறையாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஷ்மிகா, 'அனிமல்' படத்தில் தான் நடித்தது குறித்து எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்தார். "ஒரு நடிகையாக, ஒரு படத்தில் என் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் மற்றும் கதையின் ஓட்டம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே நான் முடிவுகளை எடுக்கிறேன். 'அனிமல்' படத்தைப் பொறுத்தவரை, நான் நடித்த கீதா கதாபாத்திரம், படத்தின் கதைக்கு மிகவும் அத்தியாவசியமானது என்று நம்பினேன்," என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், " நான் இந்த படத்தை படமாக மட்டுமே பார்த்தேன். ஒரு ஹீரோ திரையில் சிகரெட் பிடித்தால், அவர் மற்றவர்களை சிகரெட் பிடிக்க தூண்டுகிறார் என்கிறார்கள். ஆனால் இன்றைய சமுதாயத்தில் மக்கள் புகைபிடிப்பது எல்லாம் சாதாரணம் தான்."
"நான் திரையில் புகைபிடிப்பது போல நடிக்க மாட்டேன். ஒரு படத்தை படமாக மட்டுமே பாருங்க. யாரும் படத்தை பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தவில்லை."
"ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மோசமான நபர் இருப்பார். அதை அனிமல் பட இயக்குனர் வெளியில் காட்டிவிட்டார், அவ்வளவு தான். இதைக் கொண்டு வலுப்படுத்தி விவாதம் செய்ய தேவையில்லை" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
ராஷ்மிகாவின் இந்தப் பேச்சு, 'அனிமல்' திரைப்படம் குறித்த சர்ச்சைகள் இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்பதையே காட்டுகிறது. அதே சமயம், ஒரு நடிகையாக தனது நிலைப்பாட்டையும், எதிர்கொள்ளும் சவால்களையும் அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.
இப்போது இந்த கருத்து சமூக வலைதளங்களில் பலதரபட்ட கருத்துக்களை தூண்டியுள்ளது. பலரும் ராஷ்மிகாவின் படத்தை பார்க்க கூடாது, தோன்றுவதையெல்லாம் பேசிவிடுவதா? ராஷ்மிகா ஒரு பொறுப்பு உள்ள நடிகையா? என்றெல்லாம் பேசுகிறார்கள்.