
பயோஃபிலிக் வடிவமைப்பு என்பது வீட்டில் வசிப்பவர்களை இயற்கையுடன் மிக நெருக்கமாக இணைக்கும் ஒரு கட்டடக்கலை அணுகுமுறையாகும். இதனால் இயற்கை உலகத்துடன் ஆழமான தொடர்பை வளர்க்கும் இடங்களை உருவாக்க இயற்கைக்கூறுகள், பொருட்கள் மற்றும் செயல்முறைகளை இவை உள்ளடக்கியதாக இருக்கும். இதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், நல்வாழ்வை ஊக்குவிக்கவும், உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் உதவும்.
நகர்ப்புற விரிவாக்கமும், நவீன வாழ்க்கை முறையும் நம்மை இயற்கை சூழல்களில் இருந்து தூர விலக்கி வைத்துள்ளது. அவற்றுடன், அதாவது இயற்கையுடன் மீண்டும் இணைவது என்பது சிறப்புதானே! கட்டடக்கலையில் பயோஃபிலிக் வடிவமைப்பு மனிதர்களை இயற்கையுடன் இணைந்து வாழ வழி வகுக்கிறது. பசுமையான கூரைகள், தாவர சுவர்கள், தாவரங்களைக் கொண்டு அலங்காரத்தில் வடிவமைப்பு போன்று முடிந்த வரை இயற்கையை உள்ளே கொண்டு வருவதில் மனதிற்கும், உடலுக்கும் நன்மை செய்கிறது.
பயோஃபிலிக் வடிவமைப்பை உருவாக்குவது எப்படி?: பயோஃபிலிக் வடிவமைப்பின் முன்னோடியாகக் கருதப்படும் ஸ்டீபன் கெல்லர்ட் என்பவர் இன்று வரை பயன்படுத்தப்படும் கொள்கைகளின் கட்டமைப்பை உருவாக்கினார். கட்டடக்கலையின் சமீபத்திய போக்குகளில் ஒன்றாக இந்த பயோஃபிலிக் வடிவமைப்பு மாறியுள்ளது. இதனால் இயற்கையுடனான தொடர்பை வண்ணங்கள், தாவரங்கள், சூரிய ஒளி மற்றும் நீர் மூலம் உருவாக்க முடியும். சுற்றியுள்ள இயற்கையுடன் இணக்கமாக செயல்படும் கட்டடங்கள், காற்றோட்டமான வசதியுடன் நல்வாழ்வை மேம்படுத்துவதால் இவை நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.
பயோஃபிலிக் வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் பொருட்கள்: பயோஃபிலிக் வடிவமைப்பு என்பது இயற்கை பொருட்கள், காட்சிகள், தாவரங்கள், கலை, வடிவம் மற்றும் நிறம் போன்ற இயற்கையின் மறைமுக பிரதிநிதித்துவங்களை வடிவமைப்பில் இணைத்து வெளியில் இருப்பது போன்ற உணர்வுகளை உருவாகப்படுத்துவதாகும். இது மரம், கல், மூங்கில், மட்பாண்டங்கள், சணல், கரிம பருத்தி போன்றவற்றை பயன்படுத்தி உருவாக்கப்படுவது.
பயோஃபிலிக் வடிவமைப்பின் நன்மைகள்: பயோஃபீலிக் வடிவமைப்புக் கட்டடத்தில் வசிப்பவர்களை இயற்கையுடன் மிக நெருக்கமாக இணைக்க முயல்கிறது. இது மன அழுத்தத்தை குறைக்கும். மனநிலையை மேம்படுத்தும். இதன் மூலம் ஆரோக்கியமான சூழலை உருவாக்க முடியும். சுற்றுச்சூழலில் நேர்மறையான தாக்கத்தை உண்டுபண்ணும். இந்த வசதியான மற்றும் தூண்டுதலான சூழல் படைப்பாற்றலையும், அறிவாற்றல் செயல்பாட்டையும் அதிகரிக்கும். உற்பத்தித் திறனையும் அதிகரிக்க உதவும்.
பயோஃபிலிக் வடிவமைப்பின் குறைபாடுகள்: பயோஃபிலிக் வடிவமைப்பு அனைத்து இடங்களுக்கும் நடைமுறைக்கு ஏற்றதாக இருக்காது. சில பணியிடங்கள், குறைந்த இடப்பரப்பு கொண்டதாகவும், குறைவான காற்றோட்டம், வெளிச்சம் போன்றவற்றைக் கொண்டதாகவும் இருக்கலாம். இதனால் அவற்றுடன் இயற்கைக்கூறுகளை இணைப்பது கடினமாகலாம். செலவும் அதிகம் ஆகும். இயற்கைக்கூறுகளுக்கு அதிக பராமரிப்பு தேவைப்படும். தாவரங்களுக்குத் தேவையான நீர்ப்பாசனம் செய்வதும், இலைகள், குப்பைகளை சுத்தம் செய்வதும் என பராமரிப்பு அதிகம் தேவைப்படும்.
பயோஃபிலிக் என்பது இயற்கையின் மீதான அன்பு மற்றும் இயற்கை உலகத்தின் மீதான ஈடுபாடு என்று கொள்ளலாம். இதனைப் பயன்படுத்தி நம் வீட்டையும், பணியிடத்தையும் வடிவமைப்பதன் மூலம் இயற்கையுடன் ஒன்றி வாழ முயற்சி செய்யலாம். இயற்கையுடனான ஒரு புதிய தொடர்பு எதிர்காலத்திற்கான நம்பிக்கையைத் தூண்டுகிறது.