

தமிழகத்தில் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் கூட்டுறவுத் துறையின் நியாயவிலைக்கடைகள் வாயிலாக இலவசமாகவும், மானிய விலையிலும் உணவுப்பொருட்கள் மாதம்தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 28 லட்சத்து 12,942 குடும்ப அட்டைதாரர்களும், 35,000 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதே நேரம் ரேஷன் கார்டுகள் உணவு பொருட்களை வாங்குவதற்கான ஆவணங்களாக மட்டுமில்லாமல், அரசின் உதவிகளை பெற அடையாள அட்டையாக உள்ளது.
அந்த வகையில், குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இலவச மற்றும் மானிய விலையிலான அரிசி, பாமாயில், பருப்பு வகைகள் மட்டுமின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு, பேரிடர் நிவாரண உதவிகள் மற்றும் அரசு வழங்கும் அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் பெற ரேஷன் கார்டு தான் பிரதான சான்றாக விளங்குகிறது. குறிப்பாக தமிழக அரசின் மிக முக்கியமான திட்டமான 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஸ்மார்ட் ரேஷன் கார்டு மிக அத்தியாவசியமான ஆவணமாகும்.
எனவே தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக ஏராளமான பெண்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருந்தனர். உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு வேண்டி 2 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அரசுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதில் தற்போது தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு முதற்கட்டமாக 46,000 புதிய ரேஷன் அட்டைகள் (குடும்ப அட்டைகள்) விநியோகம் செய்யப்பட உள்ளதாக உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கார்டுகளில் முகவரி மாற்றம் செய்வதற்குப் புதிய நடைமுறைகளும், கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு தற்பொழுது நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய விதிமுறையால் பலரின் ஆன்லைன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறி, பொதுமக்கள் அதிருப்தி மற்றும் குழப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பொதுவாக ரேஷன் கார்டில் முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் போது, புதிய முகவரிக்கான ஆவணமாக இதுவரை ஆதார், வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் ரசீது மட்டும் வழங்கினால் போதுமானததாக இருந்தது.
இந்த புதிய விதிமுறைகளின்படி, முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரரின் தற்போதைய வீட்டுச் சமையல் கேஸ் சிலிண்டர் ரசீதுடன் சேர்த்து, விண்ணப்பத்தாரரின் தந்தை மற்றம் மனைவியின் தந்தை வீட்டு கேஸ் சிலிண்டர் ரசீதுகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று விதிமுறைகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பொதுவாக வீடு மாறி செல்வோர், ரேஷன் கார்டு முகவரி மாற்றத்துக்கு பொது வினியோக திட்ட இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். புதிய முகவரியை பதிவு செய்து அந்த முகவரிக்கு ஆதார ஆவணமாக ஆதார் கார்டு உட்பட ஏதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதை அதிகாரிகள் பரிசீலனை செய்து முகவரி மாற்றத்துக்கு ஒப்புதல் அளிப்பது வழக்கமான நடைமுறையாக இருந்து வந்தது.
ஆனால், தற்பொழுது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறைகளின் காரணமாக, ஆன்லைன் மூலம் முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரரின் வீட்டுச் சமையல் கேஸ் சிலிண்டர் ரசீது கண்டிப்பாகக் கேட்கப்படுகிறது.
அதுமட்டுமன்றி, கூடுதல் நிபந்தனையாக விண்ணப்பதாரரின் தந்தை மற்றும் மனைவியின் தந்தையுடைய வீடுகளின் காஸ் சிலிண்டர் ரசீதுகளும் கட்டாயமாகக் கேட்கப்பட்டு வற்புறுத்தப்படுகிறது.
ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்ய ஆதார் கார்டு, மின்கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தக நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் கேஸ் ரசீது வைத்தாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாகவும், இந்த புதிய விதிமுறையால் பலரின் ஆன்லைன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறி, பொதுமக்கள் அதிருப்தி மற்றும் குழப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட ரேஷன் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, விண்ணப்பதாரர் தங்கியுள்ள தற்போதைய முகவரியில் உள்ள கேஸ் ரசீது உடன் சேர்த்து அவருடைய தந்தை கேஸ் ரசீது மற்றும் மனைவியின் தந்தை வீட்டு கேஸ் ரசீது என மூன்று பேரின் கேஸ் சிலிண்டர் ரசீதுகளையும் இணையதளத்தில் முறையாகப் பதிவேற்றம் செய்தால் மட்டுமே முகவரி மாற்றம் செய்ய முடியும் என்று அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறுகின்றனர். இதே நடைமுறையை ரேஷன் கார்டில் உறுப்பினர் பெயர் நீக்கத்திற்கும் பின்பற்றுகின்றனர்.
அரசின் இந்த புதிய கடினமான விதிமுறைகளால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் ரேஷன் கார்டுகளில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாமல் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அதேசமயம் காதல் திருமணம் செய்தவர்கள் ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் செய்யும் போது அவர்களை ஏற்காத பெற்றோர் எப்படி கேஸ் ரசீது வழங்குவார்கள் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.