

சமையலுக்கு எது இருக்கிறதோ இல்லையோ, வெங்காயம் இல்லாவிட்டால் பெண்கள் டென்ஷன் ஆகிவிடுவார்கள். அந்தளவுக்கு அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத பொருளாக பல்லாரி என்றழைக்கப்படும் வெங்காயம் இருந்து வருகிறது. வெங்காயத்தை தோல் உறிக்கும்போது கண்களில் கண்ணீர் வரும். ஆனால் வெங்காயத்தின் விலையை கேட்டாலே இல்லத்தரசிகளுக்கு கண்களில் கண்ணீர் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வெங்காயத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாகவும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாகவும் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மூன்று கிலோ வெங்காயம் 100 ரூபாய் விற்கப்பட்ட நிலையில் தற்போது 60- 75 வரை விற்பனை செய்யப்படுகிறது.
அண்டை மாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக தமிழ்நாட்டிற்கு வரும் வெங்காயத்தின் அளவு கடுமையாக குறைந்துள்ளது. இதனால் வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில், வெங்காயம் விலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் (நியாய விலை கடைகள்) மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்து வருகிறது. அதன்படி கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை அண்மைக்காலமாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு சந்தை குறுக்கீட்டு நடவடிக்கையாக வெங்காயத்தைக் கொள்முதல் செய்து, கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
முதற்கட்டமாக, இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் மூலமும், இரண்டாவது கட்டமாக, இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திடமிருந்தும் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, மூன்றாம் கட்டமாக கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 8,914 நகர்ப்புற நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில், ஒரு குடும்ப அட்டைக்கு 1 கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களின் தொடர்ச்சியான தேவை மற்றும் வரவேற்பைக் கருத்தில் கொண்டு, மூன்றாம் கட்டமாக தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திடமிருந்து 700 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, பல்வேறு போக்குவரத்து மூலமாக மாவட்டங்களில் உள்ள நியாயவிலைக்கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளுக்கு சென்று சேரும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் தொடர்சியாக, நேற்று முன்தினம் (அக்டோபர் 10) முதல் சென்னையிலும், நேற்று (அக்டோபர் 11) முதல் இதர மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும். குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலை கடைகளில் வெங்காயத்தை பெற்று பயன்பெறலாம்.
இந்த நடவடிக்கையின் மூலம், வெங்காயத்தின் விலை உயர்வால் பொதுமக்களுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமையைக் குறைத்து, குறிப்பாக ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு வெங்காயம் நியாயமான விலையில் தொடர்ந்து கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ளது.
அதன்படி, கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகளில் வெங்காயம் விற்பனை தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை பொதுமக்கள் 96005 61969 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தெரிவிக்கலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.