

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எப்போதுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்று சொல்ல வேண்டும். முதலில் இந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, படிப்படியாக மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
அந்த வகையில் தமிழில் பிக்பாஸ் - 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் சுமார் 100 நாட்கள் கடந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பிக்பாஸ் - 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து சர்ச்சைகள், சண்டைகள், ரெட் கார்டு, ரீ-என்ட்ரி என பல விஷயங்களுக்காக பேசப்பட்டது. பலரும் இந்த சீசனை தடை செய்ய வேண்டும் என்று குரல் கொடுக்கத்தொடங்கினர்.
தொடர்ச்சியாக டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் நடைபெற்ற ஒரு டாஸ்கில் வன்முறையை கையாண்டியதற்கும், அதை நியாயப்படுத்திய காரணத்திற்காகவும், எந்த சீசனிலும் இல்லாத வகையில் முதல் முறையாக 2 பேருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. இதில் விஜே பாருவும், கம்ருதீனும் வெளியேறினர்.
அதனை தொடர்ந்த வலுவான போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று ஒரு சிலரை எதிர்பார்த்த வேலையில், அவர்கள் பாதியிலேயே கழன்று கொண்டர். 6 பேர் ஃபினாலேவிற்கு தகுதி பெற்ற நிலையில், டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட கானா வினோத், ரூ.18 லட்சத்துடன் பெட்டியை எடுத்து வெளியேறினார்.
கடைசியில் இறுதி கட்டத்தில் சபரிநாதன், அரோரா, விக்ரம் மற்றும் திவ்யா கணேஷ் உள்ளிட்ட 4 போட்டியாளர்கள் இறுதிப்போட்டியாளர்களாக நுழைந்தனர். இந்நிலையில் இந்த சீசன் டைட்டிலை தட்டித் தூக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட அரோரா 4-வது ரன்னர் அப்பாக எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறினார்.
கடைசியில் பிக்பாஸ் தொடங்கிய 28வது நாளில், வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த திவ்யா கணேஷ் அதிக வாக்குகள் பெற்று பிக்பாஸ் 9 டைட்டிலை வென்றார். மேலும் அவருக்கு ரூ.50 லட்சம் வரை பரிசுத்தொகையாக கிடைத்துள்ளது.
திவ்யாவிற்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை பெற்ற போட்டியாளர்களின் அடிப்படையில் சபரி 2-ம் இடத்தையும், விக்ரம் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், ‘திவ்யா கணேஷ் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்து, அனைவரிடமும் அன்பு பாராட்டிய அதே நேரத்தில் அவர்களின் தவறை முகத்திற்கு நேராக சுட்டிக் காட்டினார். அதிலும் கார் டாஸ்க்கில் தன்னை அசிங்கப்படுத்திய சான்ட்ராவுக்காக பார்வதி மற்றும் கம்ருதீனிடம் இவர் கெத்தாக சண்டை போட்டது பெரிதாக பேசப்பட்டதுடன் அவருக்கு ஆதரவும் அதிகரிக்க செய்தது. அதுவே அவரை இறுதி சுற்றி வரை வந்து நிற்க காரணமாக அமைந்ததுடன் இந்த சீசனில் டைட்டிலை வெல்லவும் முடிந்தது.
பல தமிழ் சீரியல்களில் நடித்திருந்தாலும், பாக்கியலட்சுமி சீரியலுக்கு பிறகுதான் திவ்யா பிரபலமாக மாறினார். இவர், வளர்ந்து வரும் நடிகையாக இருந்த போது, ஒரு பிரபல நடிகரை திருமணம் செய்துகொள்ள இருந்தார். ஆனால், அந்த திருமணம் பாதியிலேயே நின்று போனது குறிப்பிடத்தக்கது.