இந்தியாவில் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் உதவிகளுக்கு வங்கி கணக்கு அவசியம். அதுமட்டுமின்றி நல உதவிகள், மானியங்கள் அனைத்தும் வங்கிகள் மூலமாகவே நடைபெற்று வருவதால் மக்களுக்கு வங்கிக்கணக்கு என்பது அவசியமான ஒன்றாகவே மாறிவிட்டது. அந்த வகையில்
வங்கியில் கணக்கு தொடங்குவது கூட சுலபம். ஆனால் அந்த கணக்கை பராமரிப்பது என்பது மிகவும் கடினம்.
ஆனால் வங்கிக்கணக்கில் இருந்து எவ்வளவு பணம் வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமே இல்லாமல் பணம் அனுப்ப முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆமாங்க. அப்படி ஒரு சூப்பரான அறிவிப்பை தான் ஆர்பிஐ (RBI) இப்போது அறிவித்துள்ளது.
ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பு என்ன, இதில் உள்ள சலுகைகள் என்ன, இதன் மூலம் யாருக்கெல்லாம் பலன் கிடைக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாங்க.
நம் நாட்டில் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் குறைந்தபட்ச இருப்பு(minimum balance) வைத்திருக்க வேண்டியது கட்டாயம். அதாவது, பொதுவாக, வங்கிகள் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வழக்கமான சேமிப்புக் கணக்குகளுக்கு காலாண்டு சராசரி இருப்பு (QAB) அல்லது மாதாந்திர சராசரி இருப்பு (MAB) பராமரிக்க வேண்டும். அதேசமயம் வாடிக்கையாளர் அவர்களது வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காத பட்சத்தில் வங்கிகள் அபராதம் விதித்து குறிப்பிட்ட தொகையை வசூலிக்கும்.
அதேசமயம் ஜீரோ பேலன்ஸ் சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் இருந்தால், கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
ஏழை எளிய மக்கள், அன்றாட கூலித்தொழில் செய்பவர்கள் பயன்பெறும் வகையில் குறைந்தபட்ச இருப்பு இல்லாத சேமிப்பு கணக்கு(Zero Balance Account) தொடங்கலாம் என்று ஆர்பிஐ கடந்த 2005-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.
இது அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கு (basic savings bank deposit account) என்ற பெயரில் அமல்படுத்தப்பட்டது. தற்போது இந்த அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்குகளில் ஆர்பிஐ பல அடிப்படை சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
வாடிக்கையாளர் தனது வங்கி கணக்கில் இருந்து எத்தனை முறை வேண்டுமானாலும், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கட்டணமே இல்லாமல் அனுப்பக்கூடிய கட்டணமில்லா பரிவர்த்தனை வசதியை ஆர்பிஐ அறிமுகப்படுத்தி உள்ளது.
ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் மற்றும் ஏடிஎம் கம் டெபிட் கார்டு(ATM cum debit card) இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வங்கியில் இந்த ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த குறிப்பிட்ட வங்கியின் ஏடிஎம் மற்றும் பிற வங்கிகளின் ஏடிஎம்களில் நான்கு முறை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மிகவும் முக்கியமாக யூபிஐ, NEFT, IMPS போன்ற டிஜிட்டல் மூலமாக பணம் செலுத்தும் டிஜிட்டல் பேமெண்ட் இந்த கணக்கில் அடங்காது என்று ஆர்பிஐ தெளிவுபடுத்தியுள்ளது.
ஏடிஎம் கார்டு, செக் புக், இன்டர்நெட், மொபைல் பேங்கிங் போன்ற எந்த சேவைகளை பெற வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்று எல்லா வங்கிகளுக்கு ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது.
இந்த சேவைகளை பெற விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் தற்போது அவர்கள் வைத்துள்ள சேமிப்பு கணக்கை, ஜீரோ பேலன்ஸ் கணக்காக மாற்றிக் கொள்ளலாம் என்று சொல்லும் ஆர்பிஐ அதனை வங்கிகள் ஏழு நாட்களுக்குள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இதில் வாடிக்கையாளர்களுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளும் அடங்கும். அதாவது ஜீரோ பேலன்ஸ் கணக்கின் மூலம் நீங்கள் அடிப்படை வங்கிச் சேவைகளை மட்டுமே அணுக முடியும்.
ஒரு வாடிக்கையாளர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருக்க முடியாது என்று கூறும் ஆர்பிஐ வாடிக்கையாளர் ஜீரோ பேலன்ஸ் கணக்கை தொடங்கும் போதே இதனை எழுத்துப்பூர்வமாக வங்கிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
எது எப்படி இருந்தாலும் வங்கியில் கணக்கு தொடங்குவதை விட அதை பராமரிக்க(maintain) செய்வது தான் பெரிய சவாலாகவே உள்ளது. இந்நிலையில் ஆர்பிஐ அறிவித்துள்ள இந்த சலுகைகள் வாடிக்கையாளர்கள் இடையே வரவேற்பை பெற்று வருகிறது.