தங்கம் விலையில் நிலையற்ற தன்மை நிலவுவதால் நகைக்கடன் தொகையை குறைத்து வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி நிதி நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. இது தங்க விலை ஏற்ற இறக்கத்தை கட்டுப்படுத்தவும், முறைசாரா கடன் சந்தையை ஒழுங்குபடுத்தவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தங்கம் விலை தற்போது தாறுமாறாக அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் திடீரென வீழ்ச்சியையும் சந்திக்கும். இப்படி நிலையற்ற தன்மையில் தங்கம் விலை இருப்பதால் சில நேரங்களில் நகையின் மதிப்பை விட பெறப்படும் கடன் தொகை அதிகமாகி விடுகிறது. இப்படிப்பட்ட சூழலில் நகைக்கடனை திருப்பி செலுத்துவதில் பெரும்பாலானவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அது மட்டுமல்லாமல் நகையை திருப்பாமல் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விடுகிறார்கள். இது வங்கிகளுக்கு கவலையை ஏற்படுத்திய நிலையில் ரிசர்வ் வங்கி இந்த புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. .
தற்போது நகைகள் அடகு வைக்கும் பொழுது தங்கத்தின் மதிப்பில் 70 முதல் 72% வரையிலான அளவுக்கு கடன் வழங்கப்படுகிறது. தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை காரணமாக இதனைக் குறைக்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தங்க நகையின் மதிப்பில் 60 முதல் 65% வரையிலான அளவுக்கு மட்டுமே கடன் வழங்குவதற்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளது. வங்கிகளின் இந்த முடிவால் நகைக்கடன் வாங்க திட்டமிடுபவர்களுக்கு நகையின் மதிப்பில் 60% அளவுக்கே கடன் கிடைக்க வாய்ப்புள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் நாணய மாற்று விகித மாற்றங்களால் தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் வங்கிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. முறைசாரா கடன் சந்தையில் உள்ள இடைவெளிகளை அடைக்கவும், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடி முடிவுகள், தங்கக் கடன் வழங்குவதில் அதிக எச்சரிக்கையுடனும், கடுமையான விதிகளுடனும் செயல்பட வங்கிகளைத் தூண்டுகிறது. இதன் விளைவாக வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் கடன் அளவு குறைகிறது.