வெளிநாடு செல்லும் இந்தியர்கள் இனி இந்திய ரூபாயை எளிதாக வெளிநாட்டு நாணயமாக மாற்றிக்கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது.
சர்வதேச விமான நிலையங்களில் குடிவரவு (Immigration) மற்றும் பாதுகாப்புப் பரிசோதனைக்குப் பிறகு, 'புறப்பாடு' (Departure) பகுதியில் உள்ள அந்நியச் செலாவணிக் கவுன்ட்டர்களில் (Forex Counters), வெளிநாடு செல்லும் இந்தியர்கள் இந்திய ரூபாய் நோட்டுகளை வெளிநாட்டு நாணயமாக மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக, இந்த வசதி வெளிநாட்டினருக்கு மட்டுமே இருந்த நிலையில், தற்போது இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) என அனைவரும் இதைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு, வெளிநாடு செல்லும் இந்தியர்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள், அங்கீகரிக்கப்பட்ட பண மாற்று நிலையங்கள், சர்வதேச விமான நிலைய அந்நியச் செலாவணிக் கவுன்ட்டர்கள், ஆன்லைன் அந்நியச் செலாவணி சேவைகள் மற்றும் அந்நியச் செலாவணி அட்டைகள் (Forex Cards) ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. தற்போது ரிசர்வ் வங்கி அளித்துள்ள இந்தத் தளர்வு பயணிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
திடீரெனப் பணத்தை மாற்ற மறந்துவிட்டு விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு, இது கடைசி நேரத்தில் ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும். மேலும், குடிவரவு மற்றும் சுங்கச் சோதனை முடிந்து, விமானங்கள் ஏறும் பகுதிக்குச் சென்ற பிறகும் பணத்தை மாற்றிக்கொள்ளும் வசதி இருப்பதால், இது பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தும். அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் பயனுள்ளதாக அமையும்.