கானாவாழை என்பது பல மருத்துவ நன்மைகளைக் கொண்ட ஆரோக்கியமான உணவுப்பொருள். இந்தக் கீரையை ‘கன்றுக்குட்டிபுல்’ என்றும் சொல்வார்கள். இதன் இலைகள் மட்டுமல்ல, தண்டுகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை. இந்த தண்டுகளில் ஏராளமான புரோட்டீனும், மாவுச் சத்தும், மியூசிலேஜ் என்ற நீர்ச்சத்தும் அடங்கி இருக்கின்றன. அதனால்தான் கன்றுக்குட்டிக்கு இந்தக் கீரை மிகவும் பிடிக்குமாம். கன்றுக் குட்டிகளின் தாய்ப்பாலை மறக்கடிக்க இந்தக் கீரையைத்தான் உணவாகத் தருவார்கள்.
கானாவாழையில் நிறைந்துள்ள சத்துக்கள்: கானாவாழையில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின்கள் A,C, B6 மற்றும் இரும்புச் சத்து ஆகியவை நிறைந்துள்ளது. இதில் உள்ள நார்சத்து செரிமானத்திற்கு உதவுவதுடன் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. நரம்பு மற்றும் தசை சுகாதாரத்திற்கு அவசியமான பொட்டாசியம் அதிகம் உள்ளதால் இது நரம்பு மற்றும் தசைகளின் செயலை ஒழுங்குபடுத்த உதவுகிறது. இதிலுள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. கானாவாழையில் உள்ள மெக்னீசியம் மற்றும் கால்சியம், எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்து காரணமாக இதை உணவில் சேர்ப்பது உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.
இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் இருக்கும் சுழற்சிகளை குறைத்து உடல் வலி மற்றும் முடக்கு வாதத்தை தடுக்க உதவுகிறது. இதில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளதால் உடலுக்கு உடனடி ஆற்றல் அளிக்கிறது. கானாவாழையில் உள்ள வைட்டமின் A மற்றும் C சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், வைட்டமின் B6 மூளை செயல்பாட்டை மேம்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
மருத்துவ குணங்கள்: கானாவாழை காய்ச்சலை போக்கக்கூடிய ஒரு அற்புத மூலிகை, இரத்தத்தைத் தூய்மைப்படுத்தும் மருத்துவ குணம் மிக்கது. சிறுநீர் பெருக்கியாகவும், உடலினுள் தேங்கி கிடக்கும் உப்பு சத்தை வெளியேற்றும் துப்புரவு பணியாளராகவும் செயல்படுகிறது. சிறுநீரகப் பைகள், கல்லீரல் மற்றும் மண்ணீரல், நுரையீரல், இரைப்பை ஆகியவற்றிற்கு பலம் தருவதோடு, அவற்றின் கோளாறுகளை சீர் செய்வதாகவும் விளங்குகிறது.
கால்களில் நீர் தேங்கி வீக்கமும், வலியும் உண்டாக்கும் வாத நோயில் கானாவாழை கைவந்த மருந்தாக இந்நோயை தணிக்கிறது. இந்தக் கீரையை உள்ளுக்கு சாப்பிடுவதாலும், சாற்றை மேலுக்குப் பூசிக்கொள்வதாலும் வீக்கமும், வலியும் கரைந்து போகும். கானாவாழை வாந்தி உண்டாக்கியாகவும், மாதவிலக்கு தூண்டியாகவும், நெஞ்சக சளியை கரைக்கக்கூடியதாகவும், இரத்தத்தை உறைய வைக்கும் தன்மையும் கொண்டது.
மருத்துவமான சமையல் பொருள்: ஒரு கைப்பிடி கானாவாழை இலைகளுடன் 10 மிளகு சேர்த்து கொதிக்க வைத்து பனைவெல்லம் கலந்து குடித்தால் காய்ச்சல் பறந்து விடுமாம். இரத்த மூலத்தை குணமாக்கக்கூடிய அளவுக்கு குளிர்ச்சி வாய்ந்தது. இந்தக் கீரையுடன் துத்தி இலைகளையும் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குணமாகும். உடலிலுள்ள சூட்டை அகற்றுவதுடன், தீக்காயம் வரை போக்கக் கூடியது.
நீண்ட நாள் படுக்கையாக இருப்பவர்களுக்கு முதுகிலும், இடுப்பு மற்றும் கழுத்து பகுதிகளிலும் ஏற்படும் புண்களை ஆற்றக்கூடிய சக்தி கானாவாழைக்கு உண்டு. இந்தக் கீரையை கசக்கி பிழிந்து சாறு எடுத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து முகப்பருக்களின் மீது தடவி வந்தால் அவை உதிர்ந்து விடும். இலைகளை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தாலே வாய் புண்கள் ஆறிவிடும், பற்களிலும், தொண்டையிலும் கிருமிகள் இருந்தாலும் அழிந்துவிடும்.
மொத்தத்தில் கானாவாழை கீரையை மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தினால் நம்முடைய உடலில் நோய்கள் காணாமல் போய்விடுவதால்தான் இதற்குக் கானாவாழை என்று நம் முன்னோர்கள் பெயர் வைத்திருக்கிறார்கள்.