
சீனா என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அதன் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் தான். அது எப்படி கடந்த காலத்தில் உலகையே வியக்க வைத்ததோ, அதேபோல் இக்காலத்திலும் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு ஒரு மிகப்பெரிய உலக சாதனையைச் செய்துள்ளது.
யாங்சி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள இந்த மெகா பாலம், அதன் தனித்துவமான சமச்சீரற்ற வடிவமைப்பு மற்றும் அதைக் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட அதிநவீன கருவிகள் மூலம் பல உலக சாதனைகளைப் படைத்துள்ளது.
இது பார்ப்பதற்கு ஒரு சாதாரண பாலமாகத் தோன்றினாலும், ஒவ்வொரு அங்குலமும் துல்லியத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது உலகின் தலைசிறந்த பொறியியல் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. திங்கள்கிழமை கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில், உலகின் மிக நீளமான கேபிள்-ஸ்டேய்டு பாலம் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது.
இந்த பாலம் சாங்சோ மற்றும் தைஜோ நகரங்களை இணைப்பதுடன், பயண நேரத்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருந்ததை வெறும் 20 நிமிடங்களாகக் குறைத்துள்ளது.
சாங்டாய் யாங்சி ஆற்றின் மீது அமைந்துள்ள இந்தப் பாலம் 10.3 கிலோமீட்டர் (6.4 மைல்) நீளம் கொண்டது. இதில், 1,208 மீட்டர் (3,960 அடி) நீள பிரதான பகுதி உள்ளது.
ஒரே கட்டமைப்பில் நெடுஞ்சாலை, வழக்கமான சாலை மற்றும் நகரங்களுக்கு இடையேயான ரயில் பாதை ஆகிய மூன்றையும் சுமந்து செல்லும் யாங்சி ஆற்றின் முதல் பாலம் இதுவாகும்.
இந்த பாலம் ஆறு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. பல புதிய தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பாலம் பிராந்திய வளர்ச்சியை அதிகரிக்கும் என்றும் யாங்சி நதி டெல்டா முழுவதும் உள்ள இணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனித்துவமான வடிவமைப்பு மற்றும் பொறியியல் சவால்கள்
சமச்சீரற்ற கட்டமைப்பு: இந்த பாலத்தின் தனித்துவமான அம்சம், அதன் இரு அடுக்கு அமைப்புதான்.
கீழே உள்ள அடுக்குகளில் ஒரு புறம் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் செல்லும் ரயில்பாதையும், மறுபுறம் சாதாரண சாலைகளும் அமைந்துள்ளன.
பெரிய பாலங்களில் இத்தகைய இருபுறமும் தனித்தனி போக்குவரத்து முறை பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.
பொறியியல் தீர்வுகள்: பொதுவாக, ரயிலின் எடை அதிகம் என்பதால், பாலத்தின் சமநிலையைப் பாதுகாக்க ரயில் பாதை நடுவில் அமைக்கப்படும்.
ஆனால் இந்த பாலம் சமச்சீரற்ற வடிவமைப்பு கொண்டிருப்பதால், அதன் மையத்தை சமன் செய்வது பெரும் சவாலாக இருந்தது.
பாலத்தின் வடிவமைப்பாளர் சின் சுவான்குவான் மற்றும் அவரது குழுவினர், ஒவ்வொரு பகுதியையும் தயாரிக்கும்போதே அதன் வடிவத்தை துல்லியமாகக் கணக்கிட்டு, பாலம் முழுமையாக இணைக்கப்பட்ட பிறகு அதன் எடை தானாகவே சமநிலையை அடையும்படி வடிவமைத்தனர்.
புதிய தொழில்நுட்பங்களும் சாதனைகளும்
புதுமையான கட்டுமானக் கருவிகள்: இந்தப் பாலத்தைக் கட்ட, பொறியாளர்கள் பல புதிய கருவிகளை உருவாக்கினர்.
அதில் ஒன்று, செயற்கைக்கோள் வழிகாட்டுதலுடன் இயங்கும் கிரேன். இது பாலத்தின் கோபுரங்களுக்குப் பொருட்களை மிகவும் துல்லியமாக தூக்கிச் சென்றது.
மேலும், பாலத்தின் பெரிய பாகங்களை மில்லிமீட்டர் துல்லியத்துடன் இணைக்க, உலகின் மிகப்பெரிய பாலம்-அடுக்கு கிரேன் (bridge-deck crane) பயன்படுத்தப்பட்டது.
சிறப்பு அம்சங்கள்:
யாங்சி ஆற்றின் வலுவான நீரோட்டங்களைத் தாங்கும் வகையில் இதன் அஸ்திவாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிலைத்தன்மைக்காக, வைரம் போன்ற வடிவத்தில் எஃகு மற்றும் கான்கிரீட் கொண்டு கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன.
வெப்பநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு சரிசெய்யும் வகையில் நெகிழ்வான இணைப்புகள் (flexible joints) இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
முந்தைய சாதனைகளை முறியடித்தது
இந்த புதிய பாலம், ரஷ்யாவில் உள்ள ருஸ்கி பாலம் (Russky Bridge) வைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளது.
ருஸ்கி பாலத்தின் நீளம் 3.1 கி.மீ மற்றும் அதன் பிரதான பகுதி 1,104 மீட்டர் ஆகும். ஆனால், சாங்டாய் பாலம் 1,208 மீட்டர் பிரதான பகுதியைக் கொண்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், அமெரிக்காவின் புகழ்பெற்ற கோல்டன் கேட் பாலம் போன்ற தொங்கு பாலங்கள் (Suspension bridges) கூட இதைவிட நீளமானதாக இருந்தாலும், கேபிள்-ஸ்டேய்டு பாலங்களின் வகையில் இதுவே உலகின் மிக நீளமானதாகும்.
சீனா 2035 ஆம் ஆண்டுக்குள் யாங்சி ஆற்றின் மீது 240 பாலங்கள் கட்ட இலக்கு வைத்துள்ளது.
இது ஒவ்வொரு 12 கிலோமீட்டருக்கும் ஒரு பாலம் என்ற கணக்கில் அமையும். இதன் மூலம் பிராந்திய வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.