
நாட்டில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழையானது, 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் கேரளாவில் முன்கூட்டியே பெய்ய தொடங்கியது. இதனால் கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து, தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது.
கடந்த சில நாட்களாக கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் தாழ்வானப் பகுதிகளில் மழை நீர் தேங்கியதுடன், வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததாகவும், சில இடங்களில் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மழை விடாமல் தொடர்ந்து பெய்து வருவதால் காசர்கோடு, வயநாடு, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள நீர்நிலைகள் நிரம்பி வருவதால், ஆறுகளின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த சில வருடங்களாக பருவமழை காலங்களில் கேரளாவில் பல மாவட்டங்கள் மழையால் அதிக பாதிப்புகளை சந்தித்து வருவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி கடந்தாண்டு இதே பருவமழையில் போது வயநாட்டில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு நுற்றுக்கும் அதிகமான மக்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். அந்த வடு இன்னும் மாறாத நிலையில் மீண்டும் இந்தாண்டும் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள் இந்த பகுதி மக்களை பயமுறுத்தி வருகிறது.
கேரளாவின் கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர் மற்றும் வயநாடு ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிக கனமழை பெய்ய கூடும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கையை, இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையாக உயர்த்தியுள்ளது.
கடந்த 15-ந்தேதி முதல் வடக்கு கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் அங்கு பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்னும் சில நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன்படி, கேரளாவில் இன்று மழை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வடக்கு கேரளாவில் உள்ள காசர்கோடு, கண்ணூர் மற்றும் வயநாடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்துக்கு ஜூலை 19, 20 ஆகிய இரு நாள்களுக்கும், மலப்புரம் மாவட்டத்துக்கு ஜூலை 20-ம் தேதி மட்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் இடுக்கி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
இதேபோன்று, கேரளாவில் வரும் 22-ந்தேதி வரையிலான 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.