மாஞ்சோலை குறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு - கோரிக்கை வைத்த மதிமுக செயலாளர் துரை வைகோ!

மாஞ்சோலை
மாஞ்சோலை
Published on

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை மக்களுக்கு, மறுவாழ்வு வசதிகள் செய்து தரும் வரை அங்கிருந்து அவர்களை அனுப்பக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருகே அமைந்துள்ள மாஞ்சோலை, ஒரு சுற்றுலா தலமாகும். இயற்கை எழில் மிகுந்த இந்த மாஞ்சோலை திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 57 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் 8,000 ஏக்கர் நிலப்பரப்பு தனியார் தேயிலைத்தோட்ட நிறுவனத்திற்காக 99 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டிருந்தது. எனில், இந்தக் குத்தகை 2028- ஆம் ஆண்டில் தான் முடிவடையும்.

இந்த தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மாஞ்சோலை, மணிமுத்தாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கி பணியாற்றி வந்தனர். ஆனால் அந்த தனியார் நிறுவனம் தீடீரென்று குத்தகை முடிவதற்கு முன்பே தங்கள் பணியை நிறுத்தி கொள்வதாகவும், மாஞ்சோலை மக்கள் ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் நோட்டீஸ்  அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், திருநெல்வேலி மாஞ்சோலையை சேர்ந்த அமுதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில்,

"மாஞ்சோலையில் நாங்கள் இரண்டு மூன்று தலைமுறைகளாக வசித்து வருகிறோம். மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான உரிமம் வருகிற 2028-ஆம் ஆண்டில்தான் முடிவடைகிறது. ஆனால் இந்த உரிமத்தை புதுப்பிதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல், இங்கு வாழக்கூடிய மக்களை அங்கிருந்து காலி செய்யக்கூடிய நடவடிக்கையை அரசும், தேயிலைத் தோட்ட நிர்வாகமும் எடுத்து வருகிறது. எனவே, இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். 

எங்கள் மறுவாழ்வுக்கான எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. குறிப்பாக, மாஞ்சோலையில் இருந்து தொழிலாளர்கள் வெளியேற்றப்படும் போது மாஞ்சோலையைச் சேர்ந்த குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். மேலும், மறு பணி வாய்ப்பு வழங்கும் வரை ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும். இழப்பீடு தொகையை அதிகரித்து கொடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கும் வரை மாஞ்சோலையில் இருந்து யாரையும் வெளியேற்றும் நடவடிக்கையை எடுக்கக் கூடாது"

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மக்களவை முன்வரிசை இருக்கைக்கு முந்தப்போவது கனிமொழியா? டி.ஆர்.பாலுவா?
மாஞ்சோலை

இந்த கோரிக்கையை இன்று ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை மக்களுக்கு மறுவாழ்வு வசதிகள் செய்து தரும் வரை  அங்கிருந்து அவர்களை அனுப்பப் கூடாது எனவும் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு தரப்பில் நாளை மறுநாள் விளக்கம் அளிக்க வேண்டும்  எனவும்  உத்தரவிட்டுள்ளது.  

இதனை தொடர்ந்து, மதிமுக தலைமைக் கழக செயலாளரான துரை வைகோ,

"மாஞ்சோலை தொழிலாளர்கள் இன்று என்னை சந்தித்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். கிட்டத்தட்ட நான்கைந்து தலைமுறைகளாக மாஞ்சோலை பகுதியில் வசித்து வரும் தொழிலாளர்களையும், அவர்களது குடும்பத்தினர்களையும் வேரோடு பிடுங்கி அகற்றுவது என்பது வேதனைக்குரிய செயலாகும். வேறு எந்த தொழிலும் தெரியாத அவர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சட்ட ரீதியான உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை நான் செய்திருக்கிறேன். ஆகவே, தமிழக அரசு இவர்களை மனிதாபிமானத்தோடு அணுகி, தேயிலை தோட்ட நிறுவனத்திடம் இருந்து கூடுதல் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரவும், அவர்கள் வசிப்பதற்கு போதிய இலவச வீட்டுமனை பட்டா வழங்கியும் உடனடியாக உதவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com