மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட, ஏழைப் பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டமான 'தாலிக்கு தங்கம் திட்டம்' மீண்டும் தமிழகத்தில் தொடங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. இந்தத் திட்டம் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தற்போது தமிழக அரசு தங்க நாணயங்களை வாங்குவதற்கான டெண்டர் கோரியுள்ளது.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவித் தொகையுடன் 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வந்தது. இந்தத் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து அதிமுக, திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பரப்புரைகளில் கூறி வருகிறார்.
அதே சமயம், திமுக அரசு, தங்கத்தின் விலை உயர்வு காரணமாக திருமண நிதி உதவித் திட்டத்தின் பயனைப் பெறுவதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும், அதற்குப் பதிலாக 'புதுமைப்பெண் திட்டம்' போன்ற பிற நலத்திட்டங்கள் மூலம் பெண்கள் பயன்பெறுவதாகவும் கூறி வருகிறது.
இப்படியான நிலையில் தற்போது தங்கத்தின் விலை அதிகரித்துவரும் சூழ்நிலையில், ஏழை குடும்பத்தினர் தங்கள் மகள்களின் திருமணத்திற்குத் தேவையான தங்கத்தை வாங்குவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.
இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் முதற்கட்டமாக, சுமார் 5,460 தங்க நாணயங்கள் கொள்முதல் செய்ய ரூ.45 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு ரூ.25,000 ரொக்கமும், 8 கிராம் தங்கமும்; பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு ரூ.50,000 ரொக்கமும், 8 கிராம் தங்கமும் மீண்டும் வழங்கப்படும். மேலும், விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கான திருமண உதவித் திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த திடீர் டெண்டர் அறிவிப்பு, நிறுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் தொடங்கப்படலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டால், ஏழை எளிய குடும்பங்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.