
கொலுவில் தெப்பக்குளம் அமைக்கும்போது, தெப்பக்குளத் தண்ணீரில் துணிக்கு போடும் உஜாலா லிக்விட் நீலத்தை சிறிது கலந்தால் தத்ரூபமாக இருக்கும்.கொலு படிக்கட்டுக்களின் ஓரங்களில் சிறிய கலர்கலரான பிளாஸ்டிக் பந்துகள் வைத்து பெவிக்கால் தடவி ஒட்டிவிட்டால் படிகள் பார்க்க வித்தியாசமாக இருக்கும்.
வீட்டில் அழகான பிளாஸ்டிக் கூடை இருக்கிறதா? அதன் நான்கு பக்கங்களிலும் கயிறு கொண்டு கட்டி, வளையல் ஸ்டாண்ட் அல்லது கொக்கியில் மாட்டிவிட்டு, உள்ளே சின்ன பட்டுத்துணி விரித்து, குட்டிக்கிருஷ்ணன் பொம்மையை வைத்துவிட, குட்டிக் கிருஷ்ணன் தொட்டிலில் ஆடும் அழகே அழகு.
கொலுவில் மலை அமைக்கும்போது, பின்புறம் நம் பார்வைக்கு தெரியாதபடி சின்னச் சின்ன குங்கும டப்பாக்களை மண்ணில் ஆங்காங்கே செருகி வையுங்கள். இவற்றில் சாம்பிராணி புகை போட்டால் பார்ப்பதற்கு பனிமலை மாதிரி இருக்கும்.
கொலுவில் விதம்விதமாக எவ்வளவு பொம்மைகள் வைத்தாலும் மரப்பாச்சி பொம்மைகள் கண்டிப்பாக இடம் பெறவேண்டும்.
கொலு நாட்களில் காலையில் விளக்கேற்றி வைத்து ஒன்பது நாட்களிலும் தேவி மாகாத்மியம், லலிதா ஸஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி, அபிராமி, அந்தாதி என ஸ்தோத்திர பாராயணங்கள் நடைபெற வேண்டும். அப்பொழுதுதான் வீட்டிற்கும், நாட்டிற்கும் சுபிட்சங்கள் ஏற்படும்.
நம் வீட்டில் வேலை செய்யும் பெண்கள், சமைக்க வரும் மாமிகளை கண்டிப்பாக அழைத்து மஞ்சள், குங்குமத்துடன் பணம் வைத்துக்கொடுங்கள்.
ஏழைப்பெண்ணை அழைத்து, சாப்பாடு போட்டு, புடவை வைத்துக் கொடுங்கள். அடுத்து வரும் தீபாவளிக்கு உபயோகப்படுத்திக்கொள்வார்கள். உங்களுக்கும் பலன், அவர்களுக்கும் திருப்தி.
நவராத்திரிக்கு எப்போதும் தெரிந்தவர்கள், சொந்தக்காரர்கள் என்றுதான் கூப்பிட்டு பூஜை செய்வோம். இந்த வருடம் கொஞ்சம் வித்தியாசமாக, பக்கத்தில் வசிக்கும் முதியோர்களை, முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்களை கூப்பிட்டு பூஜை செய்து பாருங்கள். அவர்களும் தங்களை உறவினர்களைப் போல் நேசிப்பவர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள் என்று சந்தோஷப்படுவார்கள்.
வேலைக்கு போகும் பெண்களுக்கு தினமும் சுண்டல் செய்வது கஷ்டமாக இருக்கும். நவராத்திரி ஆரம்பிக்கும் முன் பொட்டுக்கடலை உருண்டை, வேர்க்கடலை உருண்டை என செய்து வைத்துக்கொண்டால், சமயத்திற்கு உதவும்.
கொலு பார்க்க வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்று, வெற்றிலை, பாக்கு மஞ்சள் கொடுத்து மனநிறைவுடன் மங்கலமாக அனுப்பிவைக்கவும்.
கொலு முடிந்த பின் மொத்தமாக பேக் செய்வதை விட ஒவ்வொரு படி பொம்மைகளையும் தனித்தனியாக சிறு பெட்டிகளில் வைத்து, அதைப் பெரிய பெட்டிகளில் வைத்தால், அடுத்த வருடம் அந்தப்படிக்குரிய பொம்மைகளை வரிசைப்படுத்த மிக வசதியாக இருக்கும்.