வயது வரம்பில் தளர்வு: மருத்துவக் காப்பீட்டு விதிகளில் புதிய மாற்றம்!

medical insurance
medical insuranceImage credit - jupiter.money

மாறி வரும் உணவுப் பழக்கவழக்கங்களால், தற்காலத்தில் இள வயது நபர்களுக்குக்கூட பல்வேறு நோய்கள் மிக எளிதில் வந்துவிடுகிறது. இப்போது நாட்டில் எங்கு திரும்பினாலும் தெருவிற்கு ஒரு மருத்துவமனை இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இருப்பிடம், உணவு மற்றும் உடை போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு ஆகும் செலவைக் காட்டிலும், மருத்துவச் செலவுகள்தான் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. 

வருங்காலம் எப்படி இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அதனால்தான், வருங்கால மருத்துவ செலவுகளை மனதில் வைத்து, பலரும் மருத்துவக் காப்பீடுகளை எடுத்து வருகின்றனர். அதன் பிரதிபலனாகத்தான் இங்கு, பல காப்பீட்டு நிறுவனங்கள் உருவெடுத்துள்ளன. மருத்துவக் காப்பீடுகளுக்கென சில விதிமுறைகள் உண்டு. அந்த விதிமுறைகளில் காப்பீட்டு பயனாளர்களுக்குச் சாதகமான சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) – Insurance Regulatory and Development Authority of India.

அனைத்து விதமான வியாதிகளுக்கும் காப்பீட்டு வசதி அளிக்கும் வகையிலும், மருத்துவக் காப்பீட்டில் அதிகபட்ச வயது வரம்பு முறையை ரத்து செய்தும், புதிய மருத்துவக் காப்பீட்டு விதிகளை அறிவித்துள்ளது, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI). இவ்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாள்தோறும் பொதுமக்களுக்கு அதிகரித்து வருகின்ற மருத்துவ செலவுகளைக் கருத்தில்கொண்டு, எல்லாப் பிரிவினருக்கும் வயது வித்தியாசம் பாராமல் மிகச் சிறந்த சிகிச்சையை அளிப்பதற்காகக் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சில விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. புதிய மருத்துவக் காப்பீட்டு விதிகளின்படி, பயனாளர் களுக்கான வயது வரம்பு 65 என்ற விதி முற்றிலும் தளர்த்தப்படுகிறது. இதன்மூலம் அனைத்து வயதினரும் மருத்துவக் காப்பீடு பெற முடியும் என்பது தெளிவாகிறது. அனைத்து வயதினருக்கும் மருத்துவக் காப்பீடு தங்கு தடையின்றி கிடைப்பதை அந்தந்த காப்பீட்டு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். 

இதையும் படியுங்கள்:
நுரையீரல் பிரச்னைகளை தடுக்கும் பச்சைக் காய்கறி!
medical insurance

மூத்த குடிமக்கள், மாணவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்கு தனியான சில கொள்கைகளை காப்பீட்டு நிறுவனங்கள் தாங்களாகவே உருவாக்கிகொள்ளலாம். அனைத்து வகையான வியாதிகளுக்கும் மருத்துவக் காப்பீட்டு வசதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக சிறுநீரக நோய், புற்றுநோய், எய்ட்ஸ் மற்றும் இதய நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டை கண்டிப்பாக மறுக்கக்கூடாது. காப்பீட்டு பிரீமியத் தொகையை தவணை முறையில் செலுத்த பயனாளர்களுக்கு வசதிகளை செய்து தர வேண்டும். 

பொது மற்றும் சுகாதாரக் காப்பீட்டு சேவைகளை அளிக்கும் நிறுவனங்களால் மட்டுமே, பயணக் காப்பீட்டுக் கொள்கைகளை அளிக்க முடியும். இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, யோகா, ஹோமியோபதி மற்றும் சித்தா உள்ளிட்ட ஆயுஷ் சிகிச்சை முறைகளுக்கு வரம்பு நிர்ணயம் ஏதும் இல்லை. மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில், அவர்களின் புகார்களைத் தீர்க்க சிறப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) அறிக்கை வெளியிட்டுள்ளத

Disclaimer: Insurance is a subject matter of solicitation. இந்தக் கட்டுரையில் இடம் பெறுவது தகவல்கள் மட்டுமே. வாசகர்கள் காப்பீட்டு முகவர்கள்/நிபுணர்கள் யோசனையைப் பெற்று செயல்படவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com