இனி கண்ணாடி முன்னாடி நின்றாலே போதும்! - நோயை கண்டுபிடிக்கும் ஜியோவின் மேஜிக் மிரர்!
உலகம் முழுவதும் உள்ள 110+ நாடுகள், பல தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவன தலைவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பில் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது இந்தியா AI இம்பாக்ட் மாநாடு. (India AI Impact Summit 2026) .
முதன்முதலாக இந்தியாவில் நடைபெறும் பெரிய சர்வதேச நுண்ணறிவு (AI) மாநாடான இதில் கல்வி, விவசாயம், சுகாதாரம் போன்றவற்றில் AI-யின் முழுமையான பயன்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் விதமாக பல்வேறு திட்டங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் கூகுள், ஓபன்ஏஐ, ஆண்ட்ரோபிக் , ஜியோ போன்ற நிறுவனங்கள் மூலம் அறிவிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் அனைவரையும் மிகவும் கவரும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பாக தற்போது பேசப்படுகிறது ஜியோ ஆரோக்யா AI (Jio Arogya AI) எனும் உடல் ஆரோக்கியம் குறித்து எச்சரிக்கை தரும் செயற்கை நுண்ணறிவு சாதனம். தற்போது உடல் ஆரோக்கியம் மீதான முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு பெருகி வருகிறது. இந்நிலையில் ஜியோவின் இந்த சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு நிச்சயமாக உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஜியோ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த AI-அடிப்படையிலான கிளினிக் அமைப்பின் நோக்கம், ஆரம்ப சுகாதார சேவையை வேகமாகவும், எளிதாகவும், மலிவாகவும் மாற்றுவதாகும். இந்தத் தொழில்நுட்பம் நாட்டின் ஆரம்ப சுகாதார மையங்களை AI-செயல்படுத்தப்பட்ட கிளினிக்குகளாக மாற்றி, தொலைதூரப் பகுதிகளிலும் சிறந்த சிகிச்சையை வழங்க உதவும் என்று ஜியோ நிறுவனம் கூறுகிறது.
ஜியோ ஆரோக்யா AI சில நிமிடங்களில் நோயாளியின் முக்கிய சுகாதார அளவீடுகளைப் பரிசோதித்து பகுப்பாய்வு செய்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உடல்நல அபாயங்கள் கண்டறியப்படுகிறது . ஆரம்ப கட்டத்திலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சை முறையை விரைவுபடுத்துவதே இதன் நோக்கம் எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த AI-அடிப்படையிலான கிளினிக் ஸ்மார்ட் மிரர் மற்றும் வாய்ஸ் AI டாக்டர் மூலம் நோயாளிகளுக்கு ஆரம்பகட்ட பரிசோதனை செய்து, தேவைப்பட்டால் சிறப்பு மருத்துவரை அணுகப் பரிந்துரைக்கிறது என்பது இதில் கவனிக்க வேண்டிய விஷயமாகிறது.
இந்த அமைப்பு செயல்படும் விதம் இதுதான்.
நோயாளி "ஸ்மார்ட் மிரர்" “Smart Mirror” மற்றும் வாய்ஸ் AI "Voice AI Doctor" எனப்படும் AI-செயல்படுத்தப்பட்ட கண்டறியும் சாதனத்தின் முன் நிற்கவைக்கப்பட்டு இந்த சாதனம் வழியே கண்கள் (eyes) , தோல் (skin) மற்றும் பிற அறிகுறிகளின் அடிப்படையில் அந்த நோயாளியின் முக்கிய சுகாதாரத் தகவல்களைப் பெறுகிறது. AI இந்தத் தரவைப் பகுப்பாய்வு செய்து ஆரம்ப சுகாதார மதிப்பீட்டைத் தயாரிக்கிறது. மேலும் விபரங்கள் கேட்க நோயாளிகள் தங்களது பிரச்சினைகளை 'வாய்ஸ் AI டாக்டரிடம்' பேசிக் கேட்கலாம். தேவைப்பட்டால், இந்த அமைப்பு மேலும் கேள்விகளைக் கேட்கும். ஆரம்ப நிலை ஆரோக்கிய ஆலோசனை வழங்கும்.
சாதாரண காய்ச்சல் முதல் நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நிலைகள் வரை வழிகாட்டலுடன் டிஜிட்டல் ஹெல்த் ரெக்கார்ட்ஸ் பதிவாகும். நோயாளியின் மருத்துவ பதிவுகள் (reports, prescriptions) ஆன்லைனில் சேமிக்கப்படுவதால் மருத்துவரை எப்போது வேண்டுமானாலும் அணுக முடியும் என்பது இதன் சிறப்பு. மேலும் டெலிமெடிசின் வசதி, வீடியோ/ஆடியோ மூலம் மருத்துவரை அணுகும் வசதி என கிராமப்புற மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
AI மூலம் நோய் அபாயத்தை முன்கூட்டியே (Predictive Analytics) கணிக்க உதவுவதால் வாழ்க்கை முறை (Lifestyle) மாற்ற ஆலோசனைகள் வழங்கி ஆரோக்யம் காக்கப்படலாம். மேலும் தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளில் சேவை வழங்கும் வாய்ப்பு உள்ளதால் மொழிப் பிரச்சனை இல்லை.
ஜியோ ஆரோக்யா AI' நோயாளிகளை அவர்களின் நிலைக்கு ஏற்ப வெவ்வேறு வகைகளாகப் பிரிக்கிறது. உடனடி மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.. இதனால் மருத்துவர்களின் அன்றாட பணிச்சுமையைக் குறைத்து, தீவிர நோயாளிகள் மீது அதிக கவனம் செலுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த AI அமைப்பு ஆரம்பகட்ட மதிப்பீட்டை மட்டுமே வழங்கும் என்றும், மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த நோயாளிக்கும் மருந்து அல்லது சிகிச்சை அளிக்கப்படாது என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெருகி வரும் டிஜிட்டல் இணைப்பைப் பயன்படுத்தி தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ ஆரோக்யா AI சாதனங்கள் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டால் ஆரம்பகட்ட பரிசோதனைக்கும் சிறப்பு மருத்துவ ஆலோசனைக்கும் இடையிலான நேரங்களை குறைக்கும் என்கின்றனர். இந்த தொழில்நுட்பம் கிராமப்புற மற்றும் மருத்துவ வசதி தேவைப்படும் தொலைதூரப் பகுதிகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

