மாணவர்களே உஷார்..! இலவச லேப்டாப்பில் ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்களா? அப்போ வாரண்டி ரத்தாகும்..!

free laptop
free laptopsource:msn
Published on

தமிழக அரசு சார்பில் 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ் இலவச லேப்டாப்கள் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி 5 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலினால் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  மாணவர்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப்பில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படமும் அவரது தந்தையும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி புகைப்படமும் அச்சிடப்பட்டிருந்தது.

உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு சுமார் 2000 கோடி ரூபாய் செலவில் இலவச லேப்டாப்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த லேப்டாப்கள் அனைத்தும் ஏசர் , டெல் , HP போன்ற சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களிலிருந்து , தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த லேப்டாப்கள் அனைத்தும் அதிநவீன தொழில்நுட்பத்தில் , இன்டெல் i3 மற்றும் ரைசன் 3 பிராசஸர்களுடன் வழங்கப்படுகின்றன. இந்த லேப்டாப்கள் விண்டோஸ் 11 இயங்குதளத்தில் சில தொழில்நுட்ப வசதிகளுடன் கிடைக்கிறது. மேலும் மாணவர்களின் AI சார்ந்த அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில்  'பெர்ப்ளெக்சிட்டி ஏஐ' (Perplexity AI) தொழில்நுட்பம் ஆறு மாத காலம் இலவசமாக வழங்கப்படுகிறது.

அரசு வழங்கிய இலவச லேப்டாப்களில் மேற்புறம் மற்றும் உள்புறத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரின் உருவப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இலவச லேப்டாப்களை வாங்கிய சில மாணவர்கள , அதில் இடம் பெற்றுள்ள ஸ்டாலின் மற்றும் கருணாநிதி ஆகியோரின் புகைப்படங்களை நீக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஒரு சிலர் தின்னர் உள்ளிட்ட திரவங்களை ஊற்றி லேப்டாப்பில் உள்ள படங்களை அழித்து வருகின்றனர் , ஒரு சிலரோ பிளேடு போன்ற கூர்மையான சில ஆயுதங்கள் மூலம் இந்த புகைப்படங்களை சுரண்டி எடுக்கின்றனர். மற்ற சிலர் இந்த புகைப்படங்களின் மேலே தங்களுக்கு பிடித்தமான சில நடிகர்கள் மற்றும் நடிகைகளின் படங்களை ஒட்டி மறைத்துக் கொள்கின்றனர். ஸ்பைடர் மேன் , அவதார் திரைப்படத்தின் சில காட்சிகள் கொண்ட ஸ்டிக்கர்களையும் லேப்டாப் மீது  ஒட்டுகின்றனர். இந்த செயல்களை எல்லாம் மாணவர்கள் செய்யும் போது வீடியோ எடுத்து , அவற்றை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

இதைப் பார்த்த பின்னர். தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (ELCOT) மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகங்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. தமிழக அரசு வழங்கும் லேப்டாப்களுக்கு ஒரு வருடம் முழுமையான வாரண்டி உள்ளது. இடையில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் , அதற்கென்று இருக்கும் பிரத்தியேக சேவை மையங்களில் மாணவர்கள் இலவசமாக பழுதினை சரி செய்து கொள்ளலாம். 

லேப்டாப்பின் வாரண்டியை பெற வேண்டும் என்றால் , லேப்டாப்பின் மேல் புறம் தமிழக அரசின் சின்னம் மற்றும் முதல்வர்களின் புகைப்படங்கள் ஆகியவை கட்டாயம் இடம் பெற்று இருக்க வேண்டும். அந்தப் படங்கள் மற்றும் சின்னங்கள் அழிக்கப்பட்டாலோ அல்லது மறைக்கப்பட்டாலோ வாரண்டியினை பெற முடியாது. மேலும் லேப்டாபில் சீரியல் எண்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் , இல்லாவிட்டால் அதற்குரிய வாரண்டி கிடைக்காது என்று அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி..! இனி வாகனங்களே பேசிக்கொள்ளும் V2V தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம்..!
free laptop

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com