உலகில் மிகவும் உயரமான எவரெஸ்ட் சிகரம் சீனாவின் திபெத் மாகாணம் மற்றும் நேபாள எல்லையில் உள்ளது.
சீனாவில் தேசிய தினம் மற்றும் இலையுதிர் காலத்தின் மையப் பகுதி விழாவைக் கொண்டாடுவதற்காக அக்டோபர் 1 முதல் 8 ஆம் தேதி வரை தேசிய விடுமுறை விடப்பட்டிருந்தது. விடுமுறை தினத்தை உற்சாகமாகவும் சாகசம் மிகுந்ததாகவும் கொண்டாட பலரும் எவரெஸ்ட் சிகரத்திற்கு வந்துள்ளனர். எவரெஸ்ட் சிகரத்தில் வீசிய பனிப்புயலால் மலை ஏறுபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தெற்கு சீனாவில் ஷென்சென் நகரில் வசித்து வரும் ஒரு பெண்மணி, "திபெத்திய மலைகளில் மலையேற்றம் சென்றிருந்த தனது கணவர், செயற்கைக்கோள் போன் மூலம் தான் சிக்கியதை தெரிவித்ததை அடுத்து" , பனிப்புயலில் சிக்கியவர்களை பற்றிய தகவல் வெளியே வந்தது. மலையேற்ற பகுதியில் சாதாரண தொலைபேசிகளுக்கு நெட்வொர்க் கிடைக்காது என்பதால் பலரும் பனிப்புயலில் சிக்கிய உடன் தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியாமல் போய் விட்டது. அதன் பின்னர் அந்தப் பெண்மணி உள்ளூர் காவல் துறையிடம் இது பற்றி புகார் அளிக்க அனைவரையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
செய்தி நிறுவனமான பிபிசியின் கூற்றுப்படி எவரெஸ்ட் சிகரத்தின் சரிவுகளில், கர்மா பள்ளத்தாக்கில் 1000க்கும் மேற்பட்ட மலையேறுபவர்கள் சிக்கித் தவிப்பதாக கூறப்பட்டிருந்தது. இவர்களை மீட்க உள்ளூர் திபெத்திய மக்கள் மற்றும் திபெத் மீட்பு குழுவினர் , காவல்துறையினர் ஆகியோர் இணைந்து பனிப் பகுதிகளுக்கு குதிரைகள் , கழுதைகள் , யாக்ஸ் மீதேறி சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை பனிப்புயலில் சிக்கி இருந்த சுமார் 350 பேர் வரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
திபெத்திய சரிவுகளில் மேலும் 200 பேர் வரை சிக்கி தவிப்பதாகவும் அவர்களையும் மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் சீன ஊடகங்கள் தெரிவித்தன. 41 வயது மதிப்பு கொண்ட ஆண் மலையேற்ற வீரர் கடும் குளிரினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக சீன அரசு செய்தி நிறுவனம் சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் திபெத் மாநிலத்தில் உள்ள டிங்ரி மாவட்டத்தில் , ஜிகாஸ் நகரில் பனிப்புயலில் சிக்கித் தவித்த 350 மலையேற்ற வீரர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை இரவு இவர்களை மீட்டு ஜிகாஸ் நகருக்கு கொண்டு வந்துள்ளனர். எவரெஸ்ட் சிகரம் ஏறும் பகுதியில் உள்ள கர்மா பள்ளத்தாக்கில் சிக்கியுள்ள 200 க்கும் மேற்பட்ட மலை ஏற்ற வீரர்களுடன் தகவல் தொடர்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. இவர்களை அரசு மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இவர்கள் தற்போது குடெங் நகரத்தை நெருங்கி வருவதாக டிங்ரி மாவட்ட செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை மாலையில் டிங்ரியில் ஏற்பட்ட கடும் பனிப் பொழிவு , குடெங் நகரத்திற்கு அருகிலுள்ள மலைப் பாதைகளில் மலையேறுபவர்களைப் பாதித்தது. குடெங் நகரத்தை அடைந்த அனைத்து மலையேற்ற வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு , உணவு மற்றும் தங்குமிடங்கள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் நல்ல உடல்நிலையில் இருப்பதாகவும் , ஒரு சிலர் தங்கள் ஊருக்கு செல்ல தயாராகி விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.