Paytm வங்கி செயல்பாடுகளை நிறுத்த ரிசர்வ் வங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
paytm வங்கி செயல்பாடுகளுக்கு தடை விதித்துள்ள ரிசர்வ் வங்கி, யூபிஐ பரிவர்த்தனைகளை வழங்கலாம் என அனுமதி அளித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி Paytm நிறுவனம் செயல்பட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பான ரிசர்வ் வங்கியின் தணிக்கை குழு அறிக்கையில், Paytm நிறுவனமானது விதிமுறைகளுக்கு இணங்கி செயல்படவில்லை என்பது தெரியவந்தது. இதனால் வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின்படி, Paytm வங்கி செயல்பாடுகளை பிப்ரவரி 29-ஆம் தேதியோடு நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் பிப்ரவரி 29-ஆம் தேதி வரை மட்டுமே வாடிக்கையாளர்கள், Paytm வங்கி கணக்கு, PAYTM வாலட், ஃபாஸ்ட் டாக் மற்றும் NCMC கார்டுகளை பயன்படுத்த முடியும். இருப்பினும், இந்த இடைப்பட்ட காலத்தில் CASHBACK, REFUND-கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப் பெறும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கணக்கில் இருப்புத்தொகை உள்ளவரை PAYTM வங்கி செயல்பாடுகளை பயன்படுத்தவும் வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. வங்கி செயல்பாடுகளுக்கு தடை விதித்தபோதிலும், பிப்ரவரி 29-க்குப் பிறகு UPI வசதியை PAYTM செயலியால் வழங்கமுடியும்.
அனைத்து பரிவர்த்தனைகள் மற்றும் கணக்குகளின் தீர்வுகளை மார்ச் 15-ஆம் தேதிக்குள் நிறைவு செய்யவேண்டும் எனவும், அதன்பிறகு எந்த பரிவர்த்தனைகளும் PAYTM மூலம் அனுமதிக்கப்படாது எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.