

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்ற 100 நாள் வேலை திட்டம். இந்த திட்டத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2006-ம் ஆண்டு அமல்படுத்தியது. அதாவது கிராமப்புறங்களில் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிதியாண்டில் உறுதியாக 100 நாள் வேலையும், உத்தரவாதமான ஊதியமும் வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இந்நிலையில் சுமார் 20 ஆண்டுகளாக அமலில் இருக்கும் இந்த திட்டத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை தற்போதைய மத்திய அரசு செய்ததுடன், இந்திட்டத்தின் பெயரை ‘விபி-ஜி ராம் ஜி திட்டம்’ என மாற்றியது. மேலும் 100 நாட்களுக்கு பதிலாக 125 நாட்கள் வேலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதைத்தவிர முந்தைய திட்டத்துக்கான முழு நிதியையும் மத்திய அரசு வழங்கி வந்த நிலையில், புதிய திட்டத்தில் 40 சதவீத நிதியை மாநிலங்கள் வழங்கும் வகையில் பல்வேறு மாற்றங்களுடன் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டம் அடுத்த நிதியாண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
இந்நிலையில் மகாத்மா காந்திக்கு பதிலாக வந்துள்ள விபி-ஜி ராம் ஜி திட்டத்தால் தமிழகத்திற்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் என்றும் கிராம மக்களுக்கு வேலையிழப்பும், அரசுக்கு நிதி சுமையும் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்த திட்டத்தின் கீழ் 100 நாட்களுக்கு பதிலாக 125 நாட்கள் வேலை வழங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்திற்கான நிதி உதவி, அதாவது ஊழியர்களுக்கான சம்பளம் முழுவதும் மத்திய அரசு வழங்கி வந்தது. அதாவது மத்திய அரசு 75 சதவீதமும், மாநில அரசின் பங்கு 25 சதவீதமும் வழங்கி வந்த நிலையில் தற்போது நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டத்தில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதமும், மாநில அரசின் பங்கு 40 சதவீதமும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மாநிலங்களுக்கு பெரும் நிதி சுமை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்தியாவிலேயே, இந்த திட்டத்தால் அதிகம் பலன் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு முன்னணியில் இருந்து வரும் நிலையில் புதிய திட்டத்தால் மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு தான் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
ஏனெனில் தமிழ்நாட்டில், இந்த திட்டத்தின் கீழ் 88,56,000 பேர் வேலை செய்ய பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கையை விட மற்ற வட மாநிலங்களில் அதிகம் பேர் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அதிக நிதி பெறுவதில் தமிழ்நாடு தான் முன்னணியில் இருக்கிறது.
இந்த புதிய திட்டத்தால் தமிழக அரசுக்கு ஏற்படும் மற்ற பாதிப்புகள் விவரம் வருமாறு:-
* பழைய திட்டத்தில் தமிழக அரசு, ஒரு நிதியாண்டிற்கு எவ்வளவு திட்டங்களை செயல்படுத்த போகிறோம் என்பதை மத்திய அரசுக்கு உத்தேச அறிக்கை கொடுக்கும். பின்னர் கூடுதலாக திட்டங்களை செயல்படுத்தினாலும், அந்த தொகையையும் மத்திய அரசு கொடுத்து விடும். ஆனால் இனிமேல் கூடுதலாக மேற்கொள்ளப்படும் திட்டத்திற்கான நிதியை 100 சதவீதம் மாநில அரசு மட்டுமே ஏற்கவேண்டும்.
* இதற்கு முன்பு இந்த திட்டத்தின் கீழ் எந்த முடிவையும் கிராம ஊராட்சிகளும், மாநில அரசும் முடிவு செய்த நிலையில் இனிமேல் மத்திய அரசும் அதனை முடிவு செய்து ஒப்புதல் வழங்கும்.
* இதற்கு முன்பு தமிழக அரசு எவ்வளவு ரூபாய் மதிப்பீட்டுக்கு திட்டம் வகுத்தாலும், அதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்ட நிலையில் இனிமேல் நிதி ஒதுக்கீட்டினை மத்திய அரசு தான் முடிவு செய்யும். அதாவது மாநிலங்களில் மக்கள் தொகை போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வந்த நிலையில் குறைவான மக்கள் தொகை கொண்ட தமிழகத்திற்கு இனிமேல் குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படும்.
இதற்கு முன்பு கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகள் வீடு கட்டும் போது 100 நாள் திட்டத்தின் கீழ் பயனாளிகளை பணியில் அமர்த்தி கொள்ளலாம். ஆனால் இனிமேல் மாநில அரசின் திட்டங்களில், இந்த மனித உழைப்பு நாட்களுக்கான நிதியை மத்திய அரசு தராது. தமிழக அரசு தான் இனி நிதி ஒதுக்க வேண்டி வரும்.