

இந்தியாவில் உள்ள பணக்கார சட்டப்பேரவை உறுப்பினரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ.1,400 கோடி. மிகவும் ஏழையான எம்.எல்.ஏ.வுக்கு ரூ.2,000 கூட சொந்தமாக இல்லை. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின்படி சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற காங்கிரஸ் உறுப்பினரும், மாநிலத்தின் துணை முதல்வருமான டி.கே.சிவகுமார்தான் நாட்டின் பணக்கார எம்.எல்.ஏ. அவரது சொத்து மதிப்பு ரூ.1,400 கோடி.
இரண்டாவது இடத்தை பெற்றுள்ளவரும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்தான். அவரது பெயர் கே.ஹெச்.புட்டசாமி கெளட. சுயேச்சை எம்.எல்.ஏ.வான இவரது சொத்து மதிப்பு ரூ.1,267 கோடி. மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான பிரியா கிருஷ்ணாவின் சொத்து மதிப்பு ரூ.1,156 கோடி.
இதுபற்றி துணை முதல்வர் சிவகுமாரிடம் கேட்டபோது, நான் பெரிய பணக்காரனும் அல்ல, ஏழையும் அல்ல. இந்த சொத்து நான் நீண்டகாலமாக சம்பாதித்து வைத்திருப்பது. மேலும் இது தனிப்பட்ட ஒருவரின் பெயரிலான சொத்தாகும் என்றும் தெரிவித்தார்.அதிக சொத்துள்ள எம்.எல்.ஏ.க்கள் முதல் 10 பேரில் நான்கு எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். மூன்று பேர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.
காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வான ரிஸ்வான் அர்ஷத் கூறுகையில், துணை முதல்வர் சிவகுமார் போன்றவர்கள் தொழிலதிபர்கள். அவர்கள் அதிக சொத்து வைத்திருப்பதில் என்ன தவறு. சுரங்க ஊழிலில் தொடர்புடையதாக குற்றச்சாட்டப்பட்டுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட அக்கட்சியைச் சேர்ந்த பலர் பணக்கார எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
சுரங்க ஊழலில் தொடர்புடையவர்களை நாங்கள் கட்சியிலிருந்து வெளியேற்றியுள்ளோம். ஆனால் காங்கிரஸ் கட்சி பணக்காரர்களை மட்டுமே பக்கத்தில் வைத்துக் கொள்ளும் கட்சியாகும் என்று கர்நாடக பா.ஜ.க. தலைவர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.
சுரங்க தொழிலில் செய்யும் தொழிலதிபர் காலி ஜனார்த்தன ரெட்டி, பணக்கார எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் 23 ஆம் இடத்தில் உள்ளார். இவர் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பா.ஜ.க.விலிருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து புதிய கட்சியை கடந்த ஆண்டு தொடங்கினார். இவரது சொத்துக்களில் பெரும்பாலானவை மனைவி அருணா லெட்சுமி பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் இவர் கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா என்னு கட்சி பெயரில் போட்டியிட்டார்.
இதனிடையே மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. நிர்மல்குமார் தாரா என்பவரின் சொத்து என்ன தெரியுமா? வெறும் ரூ.1,700 தான். ஓடிஸாவைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. மகரண்ட முதுலி தமக்கு ரூ.15,000 சொத்து இருப்பதாகவும், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. நரீந்தர் பால் சிங் சாவ்னா என்பவர் தமக்கு ரூ.18,370 மதிப்புள்ள சொத்துகள்தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் உள்ள 20 பணக்கார எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் கர்நாடகத்தில் உள்ளனர். குறைந்தபட்சம் ரூ.100 கோடிக்கு மேல் சொத்துள்ள எம்.எல்.ஏ.க்களும் அங்குதான் நிறைய உள்ளனர். அருணாசல மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்குள்ள 59 எம்.ல்.ஏ.க்களில் நான்கு பேர் கோடீஸ்வரர்கள்.