

இந்தியாவில் உள்ள பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களை லீவு நாட்களில் கூட தொந்தரவு செய்வது அதிகரித்து கொண்டே வருகிறது. அதாவது தங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்கள் லீவு எடுத்தாலும், அலுவல நேரம் முடிந்து வீட்டிற்கு சென்றாலோ, போன் செய்தோ அல்லது மெயில் அனுப்பியே அலுவலம் சம்பந்தமான வேலைகளை பார்க்க சொல்லி தொந்தரவு செய்வதாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமே இருந்து வந்தது. வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் ஊழியர்களை தொந்தரவு செய்வது தவறு என்றாலும் கூட பல நிறுவனங்கள் இதை தொடர்ந்து செய்து வருகின்றன.
இதனால் ஊழியர்கள் வேலை நேரம் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகும், விடுமுறையில் இருக்கும் போதும் அலுவலக வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஊழியர்கள் ஆளாகின்றனர்.
வாரம் முழுவதும் வேலை செய்து விட்டு வாரவிடுமுறை நாளில் குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடலாம் என்று நினைக்கும் போது கூட மேனேஜர் போனில் அழைப்பதும், மெயில் அனுப்புவதும், அதற்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது. மேலதிகாரிகளின் இந்த தொல்லையால் குடும்பத்தினருடன் நிம்மதியாக நேரத்தை செலவிட முடியவில்லை என்று வருந்துவதுடன், மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில், அலுவலக நேரம் முடிந்த பிறகு வேலை தொடர்பான செல்போன் அழைப்பு மற்றும் மெயில்களுக்கு பதிலளிப்பதை ஊழியர்கள் தவிர்க்க அனுமதிக்கும் ஒரு தனி நபர் மசோதா மக்களவையில் அறிமுகமாகி உள்ளது.
இந்த மசோதா சட்டமானால், வேலைக்கு செல்பவர்கள், இனிமேல் வேலை நேரம் முடிந்த பிறகு மற்றும் விடுமுறை நாட்களில் அலுவலகத்தில் இருந்து வரக்கூடிய போன் அழைப்புகளை எடுக்க வேண்டும் என்ற அவசியமோ, மெயிலுக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற அவசியமோ கிடையாது. இது அவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு ஏற்படுத்தி தரும்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகளும் எம்.பி.யுமான சுப்ரியா சுலே மக்களவையில் 'துண்டிப்பு உரிமை மசோதா, 2025' (right to disconnect bill 2025) என்ற பெயரில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இந்த தனிநபர் மசோதாவில் ஊழியர்கள் பணி நேரத்திற்கு பின்னரும் அலுவலகங்களில் இருந்து வரும் பணி தொடர்பான அழைப்புகளுக்கோ மின்னஞ்சல்களுக்கோ பதிலளிக்காமல் இருக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு ஏற்படுத்தி தரும்.
இந்த மசோதா மக்களவையிலும் அதன் பின்னர் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. வழக்கமாக பல தனிநபர் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டாலும் அதில் ஒரு சில மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்படும் நிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே தனியார் நிறுவன ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.