

எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஆரம்பம் முதலே தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து கொண்டே வந்தது, அதனை தொடர்ந்து தங்கத்திற்கு இணையாக வெள்ளியின் விலையில் முன்பேதும் இல்லாத வகையில் உயரத்தொடங்கியது. தினமும் உயர்ந்துகொண்டே வருகிறது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்த மக்கள் தற்போது வெள்ளியிலும் அதிகளவு முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில், முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கிய முதலீட்டு ஆதாரமாக வெள்ளி வேகமாக வளர்ந்து வருவதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில், தற்போதைய உலகளாவிய சந்தையில் நிச்சயமற்ற சூழல் நிரம்பி உள்ளதால், வெள்ளி அடிப்படையிலான முதலீட்டு தயாரிப்புகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். அதேபோல், சோலார் பேனல்கள், பேட்டரிகள், சுத்தமான எரிசக்தி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளும் அதிகளவு வெள்ளியைப் பயன்படுத்த தொடங்கி உள்ளதால், இதுவும் வெள்ளி விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளதாக வல்லூநர்கள் கூறுகின்றனர்.
தற்போதுள்ள சூழ்நிலையில் தொழில்துறையில் அதிகளவு நுகர்வு, மக்களின் பாதுகாப்பான முதலீட்டு கண்ணோட்டம் போன்றவை வரும் காலங்களில் வெள்ளியின் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாக வல்லூநர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி வெள்ளியின் விலையின் விலை அதிகரித்துகொண்டே வருவதால் மக்கள் தங்களிடம் உள்ள பழைய வெள்ளியை விற்பனை செய்து பணம் பார்த்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய பொன் மற்றும் நகைகள் சங்கம் (IBJA)பொதுவாக கடந்த காலங்களில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 10 முதல் 15 டன் பழைய வெள்ளி விற்பனைக்கு வரும் நிலையில் தற்போது ஒரே ஒரு வாரத்தில் சுமார் 100 டன் பழைய வெள்ளி விற்பனைக்கு வருவதாக கூறியுள்ளது.
2024-ம் ஆண்டில் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.86,005 ஆக இருந்த நிலையில், தற்போது இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால், வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் நல்ல லாபம் ஈட்டியுள்ளனர். வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால், தற்போது மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை விட வெள்ளியில் முதலீடு செய்யவே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நேற்றைய நிலவரப்படி(டிசம்பர் 6-ம்தேதி) வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.199-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போதே வெள்ளியின் விலை ரூ.2 லட்சத்தை தொடும் நிலையில் 2026-ம் ஆண்டின் இறுதிக்குள் வெள்ளியின் விலை ரூ.2.50 லட்சத்தை தாண்டும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதுகுறித்து மோதிலால் ஓஸ்வால் நிறுவனத்தின் ஆய்வுத் தலைவர் நவீன் தமானி, ‘வெள்ளிக்கான தேவைக்கும், அது கிடைப்பதற்கும் உள்ள பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த விலையேற்றம் இத்துடன் நிற்காது’ என்று உறுதியாக கூறியுள்ளார். மேலும், 2026-ம் ஆண்டின் ஆரம்பத்தில் ரூ.2 லட்சம் வரையும், ஆண்டின் இறுதியில் ரூ.2.5 லட்சம் வரையும் கூட வெள்ளியின் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வெள்ளி தனியாக சுரங்கங்களில் அதிகம் கிடைப்பதில்லை. தங்கம் மற்றும் சில உலோகங்களை எடுக்கும்போது ஒரு துணைப் பொருளாகவே வெள்ளி கிடைக்கிறது. இதன் விளைவாக, சந்தையில் வெள்ளிக்கு தட்டுப்பாடு இருப்பதால், விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.