குட் நியூஸ்..! ரூ.20,000 வரை குறைந்த வெள்ளி விலை - இன்னும் குறையுமா..?

சென்னையில் வெள்ளியின் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ரூ.1.70 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
Silver price drop
Silver price drop
Published on

ஆபரணங்கள் என்றதும் எல்லோருக்கும் தங்கம் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு தங்க ஆபரணங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன. எனினும், வரலாற்றின் பக்கங்களை புரட்டினால் தங்கத்தை போலவே வெள்ளிக்கும் முக்கிய பங்கு இருந்திருப்பதை காணலாம்.

அதுவும் இந்தியாவில் ஆபரணம் என்று காதில் விழுந்ததும் மக்களின் நினைவுக்கு வருவது முதலில் தங்கம் தான், அதன் பிறகு தான் வெள்ளியை பற்றி யோசிப்பார்கள். இந்திய மக்களிடையே தங்க ஆபரணங்கள் மீது அந்த அளவுக்கு மோகம் இருக்கிறது. ஆனாலும், வெள்ளி கொலுசுகள், வெள்ளி மோதிரங்கள் அணியும் பழக்கம் இந்தியர்களின் பாரம்பரியம் மற்றும் சடங்குகளில் அடங்கியுள்ளதையும் கவனிக்க வேண்டும். தங்கத்தை வாங்க முடியாத பலர் வெள்ளியில் திருப்திப்பட்டுக்கொள்வதும் நடக்கிறது. முதலீட்டுச் சாதனமாகத் தங்கம் பட்டையைக் கிளப்பினாலும், வெள்ளிக்கு மவுசு குறையவில்லை என்பதை வெள்ளிச்சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் இந்தியாவில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ராக்கெட் வேகத்தில் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், வெள்ளி விலையும் அதனோடு சேர்ந்து வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருவதால் சமானிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
வெள்ளி விலையைக் குறைத்த அமெரிக்கா மற்றும் சீனா..! உண்மை நிலவரம் என்ன?
Silver price drop

தங்கம் வாங்கமுடியாத சாமானிய மக்கள் வெள்ளியாவது வாங்கலாம் என்று நினைத்திருந்த நிலையில் அதுவும் விலை ஏறியதால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதனால் கொலுசு, வளையல் போன்ற வெள்ளிப்பொருட்களை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

தங்கத்துக்கு நிகராக வெள்ளியின் விலையும் உயர்ந்து வருவது வரலாற்றில் இதுபோல் முன்னெப்போதும் இல்லாதது என்று வியாபாரிகளும், பொருளாதார நிபுணா்களும் கூறி வந்த நிலையில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாக இறங்கு முகமாகவே இருந்து வருகிறது. இது மக்களை சற்று ஆறுதலடையச் செய்துள்ள நிலையில் பலரும் வெள்ளி நகைகளை வாங்க கடைகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நேற்று (அக்டோபர் 26-ம்தேதி) வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.170-க்கும், ஒரு கிலோ ரூ.1,70,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அந்த வகையில் அக்டோபர் 1-ம்தேதி ஒரு கிலோ வெள்ளி ரூ.1,61,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் படிப்படியாக விலை உயர்ந்து அக்டோபர் 15-ம்தேதி அதுவே ரூ.2,07,000க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பின் சற்று குறைந்து அக்டோபர் 19-ம்தேதி 1,90,000க்கு விற்பனை செய்யப்பட்டது.

அந்த வகையில் ஒரு வாரத்தில் வெள்ளியின் விலை கிட்டத்தட்ட ரூ.20,000 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு ஜனவரி மாதம் 2-ம்தேதி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.90,400க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விரைவில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கடுமையாக குறையக்கூடும் என்றும் சந்தை நிபுணர்கள் கணித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக வெள்ளி மற்றும் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. அதேபோல் தற்போதைய நிலையில் வெள்ளி 5 முதல் 6 சதவீதம் வரை சரியக்கூடும் என்றும் அதாவது ஒரு அவுன்ஸ் 44.5 டாலர் முதல் 45 டாலர் வரை குறையலாம் என்றும் மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் (MOFSL) நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் நவ்நீத் தமானி கூறியுள்ளார். மேலும், சமீபத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்திருப்பதால், உள்நாட்டுச் சந்தையில் வெள்ளியின் விலை சர்வதேச விலையை விட அதிகமாகவே குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் கணித்துள்ளார்.

அதேபோல் நீண்ட கால முதலீட்டிற்கு வெள்ளியில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது, வெள்ளி விநியோகம் தேவையை விட குறைவாக உள்ளது. இரண்டாவதாக, தங்கத்தைப் போலவே, வெள்ளியும் கடினமான காலங்களில் நிதிப்பாதுகாப்பை வழங்குகிறது. இதனால் நீங்கள் இன்னும் வெள்ளி ETF-களில் முதலீடு செய்யத் தொடங்கவில்லை என்றால், இப்போதே தொடங்குவது நல்லது.

இந்தியாவிலும் சீனாவிலும் வெள்ளியின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் வெள்ளி கிடைப்பது குறைவாகவும், கோரிக்கைகளின் தேவை அதிகமாகிறது. எதிர்காலத்தில், வெள்ளி கிடைப்பது கடினமாக மாறும். அதனால் வெள்ளியின் விலை மிகவும் நல்ல நிதி நிலையில் இருப்பதால் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு ஏற்றது என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

தற்போது வெள்ளியின் விலை குறைந்திருந்தாலும் வரும் காலங்களில் வெள்ளி விலை தொடர்ந்து உயரும் என்பதால் முதலீட்டாளர்களுக்கு பத்திரங்கள், வீட்டுமனைகளில் முதலீடு செய்வதை விட வெள்ளி சிறந்த தேர்வாகும்.

வெள்ளி பொதுவாக நல்ல ரீசேல் மதிப்பு மற்றும் வருமானத்தை வழங்குவதால் மக்கள் மத்தியில் முக்கியமான முதலீடாகத் திகழ்கிறது. ஆனால் வெள்ளி முதலீடு ஒரு முறையான வழியில் செய்யப்பட வேண்டும். உங்கள் எல்லாப் பணத்தையும் வெள்ளியில் போடக்கூடாது. ஒவ்வொரு மாதமும் சேமித்து வைக்கும் ஒரு பகுதியை வெள்ளியில் முதலீடு செய்யுங்கள். இதனால் விலை ஏற்ற இறக்கம் பெருமளவில் பாதிக்காது.

நீங்கள் சென்னையில் வெள்ளி வாங்க நினைத்தால், உலக சந்தை நிகழ்வுகள் மற்றும் சர்வதேச விலைகளை கவனிப்பதன் மூலம் சரியான முடிவுகளை எடுக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
அச்சச்சோ..! அடுத்த 25 ஆண்டுகளில் ‘வெள்ளி’யின் விலை இதுதான்! அடித்து சொல்லும் நிபுணர்கள்..!
Silver price drop

அதனால் மக்கள் வெள்ளி வாங்குவதற்கு இப்போது ஒரு சாதகமான நேரமாகும். முதலீடு செய்தாலும் சரி அல்லது பயன்படுத்துவதற்காக வெள்ளி வாங்கியிருந்தாலும் சரி, உலகளாவிய தாக்கங்களைப் பற்றி அறிந்து கொள்வது சரியான முடிவுகளை எடுக்க உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com