

சமீப காலமாக தமிழகத்தில், அதிலும் குறிப்பாக சென்னையில் தள்ளுவண்டி கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல் தள்ளுவண்டிக்கடைகளில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது.
ரோட்டு ஓரங்களில் உள்ள தள்ளுவண்டிக்கடைகளில் விற்கப்படும் உணவுகளை வீடியோ எடுத்து Youtube-களில் போட்டு hype ஏற்றி விடுவதால் பலரும் அதை நம்பி தள்ளுவண்டிக்கடைகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் ரோட்டு ஓரம், கடற்கரைகள், பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்களில் தள்ளுவண்டியில் உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடியவர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களும் ஹோட்டல்களை விட இங்கு உணவுப்பொருட்களின் விலை மிகவும் குறைவு என்பதால் இந்த கடைகளை நோக்கி அதிகளவில் செல்வதால், விற்பனையாளர்களும் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்ற ஆசையில் தரமில்லாத உணவுகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பலரும் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது.
இந்த நிலையில் தள்ளுவண்டி கடைகளில் விற்கப்படக்கூடிய உணவுப்பொருட்கள் தரமற்ற முறையில் விற்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
அதைத் தொடர்ந்து, தமிழக உணவு பாதுகாப்புதுறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் தள்ளுவண்டியில் உணவுப்பொருட்களை வைத்து விற்பனை செய்யும் உரிமையாளர்கள் முறையாக உணவு பாதுகாப்புத்துறை விதியின் படி உரிமத்தை பெற்றிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மூன்று வேளையும் அதாவது, காலை, மதியம் மற்றும் இரவு நேரங்களில் தள்ளுவண்டியில் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர்கள் உணவு பாதுகாப்புத்துறையின் உரிமத்தை பெற்றிருக்க வேண்டும். அதேசமயம் இவர்கள் உணவு பாதுகாப்புதுறை உரிமத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும், ஆன்லைன் மற்றும் இ-சேவை மையங்களில் உரிமத்தை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் வைத்திருக்கவில்லை என்றாலும், தரமற்ற முறையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்தாலும் தள்ளுவண்டி கடை வைத்திருக்கும் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அவர் மீது கடும் நடவடிக்கையுடன் அபராதமும் விதிக்கப்படும் என்று தமிழக உணவு பாதுகாப்புதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், தள்ளுவண்டி கடைகளில் முறையாக உணவு பாதுகாப்புத்துறை விதியின்படி உணவுகள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.