
தீபாவளி என்பது பட்டாசு வெடித்து மகிழ்ந்து, உற்றார்-உறவினர்கள், நண்பர்கள், அக்கம்-பக்கத்தினர் வீடுகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகை ஆகும்.
இந்த ஆண்டு வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) தீபாவளி கொண்டாடப்படுகிறது. முன்பெல்லாம் தீபாவளி பண்டிகை நெருங்கும்போது முறுக்கு, அதிரசம், லட்டு போன்ற இனிப்பு பலகாரங்களை வீட்டிலேயே இல்லத்தரசிகள் தயார் செய்து வைப்பது வழக்கம். தற்போது எந்திரமயமான வாழ்க்கை ஓட்டத்தில், வீட்டிலேயே பதார்த்தங்களை தயார்செய்யும் பழக்கம் குறைந்து வருகிறது. தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் தயாராகும் நிலையில், பலகாரங்களை தயார் செய்யும் இனிப்பு கடைகளில் பொதுமக்கள் இப்போதே ஆர்டர் கொடுத்து வருவதால் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, காரம் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு மற்றும் மருந்துகள் ஆய்வு துறை கடந்த 1-ந்தேதி முதல் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் நலனுக்காக உணவு தொழில் நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு சட்டங்களை பின்பற்ற வேண்டும். பண்டிகை நாட்களில் தற்காலிக இனிப்பு மற்றும் கார வகை தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களும் கட்டாயம் உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்ற பின்னரே பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. உரிமம் பெற்ற தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மட்டுமே மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்காலிகமாக மண்டபங்கள் அல்லது பிற இடங்களில் இனிப்பு மற்றும் கார உணவுகள் தயாரிக்கும் உணவு தொழில் நிறுவனங்களும் உணவு பாதுகாப்பு துறையில் இருந்து கட்டாயம் பதிவு பெறவேண்டும். உணவு பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களும் அதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
தீபாவளி பலகாரங்களில் கலப்பட பொருட்களை பயன்படுத்தக்கூடாது. உணவில் பயன்படுத்தப்படும் நிற பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறக்கூடாது. ஒருமுறை பயன்படுத்தும் எண்ணெயை மீண்டும், மீண்டும் பயன்படுத்தக்கூடாது. உணவு தயாரிப்பில் தரமான எண்ணெய் மற்றும் நெய் பயன்படுத்த வேண்டும். அனைத்து உணவு பொருட்களையும் எப்போதும் மூடி வைத்திருக்க வேண்டும்.
தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்றும் அவ்வாறு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விற்பனை செய்யப்படும் பலகாரங்களின் மேல் உணவு பொருளின் பெயர், தயாரிப்பு தேதி, பேக்கிங் செய்த தேதி, காலாவதியாகும் நாள், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை கட்டாயம் குறிப்பிட வேண்டும். அனைத்து உணவு கையாளும் பணியாளர்களும் மருத்துவ தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வெற்றிலை, புகையிலை, எச்சில் உமிழ்தல் போன்ற செயல்கள் உணவு தயாரிப்பு இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
விதிமுறைகளை சரியாக பின்பற்றாத உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் படி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீபாவளி பலகாரங்களை வாங்குபவர்கள் இதுதொடர்பாக புகார்கள் இருந்தால் உடனே உணவு பாதுகாப்புத் துறையின் செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.