

தொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ள நிலையில், ரோபோக்களின் பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம், அனைத்துத் துறைகளையும் ஆக்கிரமித்துள்ளது.
வருங்காலத்தில் ஏஐ கற்றுக் கொண்டால் தான் தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கள் வேலையைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற சூழலும் உருவாகியுள்ளது. இப்படியான சூழலில் மருத்துவர்கள் இல்லாமலேயே ரோபோக்களை வைத்து அறுவை சிகிச்சை சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடந்துள்ளது. மருத்துவர்கள் தொலை தூரத்தில் இருந்து ரோபோக்களை இயக்கி, அறுவை சிகிச்சையை செய்துள்ளனர்
எதிர்காலத்தில் மனித தலையீடுகள் இன்றி, அறுவை சிகிச்சைகளை செய்து முடிக்கும் சோதனையில் இறங்கியது கலிபோர்னியா பல்கலைக்கழகம். இதன்படி பன்றியின் பித்தப்பை நீக்க அறுவை சிகிச்சையை மேற்கொள்ள 2 ரோபோக்களை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர். இந்த சோதனை தற்போது வெற்றிகரமாக அரங்கேறியுள்ளது.
மருத்துவ வரலாற்றில் ரோபோக்கள் செய்த முதல் அறுவை சிகிச்சைக்கு, பல்வேறு தரப்பிலும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் சில ஆராய்ச்சி நிறுவனங்களின் ஒன்றிணைந்த கூட்டு முயற்சியால், ‘STAR (Smart Tissue Autonomous Robot)’ என்ற 2 தானியங்கி ரோபோக்கள் உருவாக்கப்பட்டன. இந்த ரோபோக்களுக்கு மருத்துவ சிகிச்சை தொடர்பான பயிற்களும் அளிக்கப்பட்டன. இவை தான் பன்றியின் குடல் திசுக்களில் பித்தப்பை நீக்க அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து, ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.
மருத்துவர்களின் நேரடித் தலையீடு எதுவும் இல்லாமல், 2 STAR ரோபோக்களும் பன்றியின் உடலில் அறுவை சிகிச்சை செய்வதற்கான இடத்தைத் தீர்மானித்து, தையல் போடுவது உள்ளிட்ட சிக்கலான பணிகளைச் செய்தன.
அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களைக் காட்டிலும், துல்லியமான முறையில் உடல் திசுக்களை இணைக்கும் திறனை ரோபோக்கள் சிறப்பாக செய்தன. எதிர்காலத்தில் மனிதர்களுக்கும், ரோபோக்கள் அறுவை சிகிச்சைகளை செய்வதை நிகழ்த்திக் காட்டுவதே இந்த சோதனையின் முக்கிய நோக்கம்.
STAR ரோபோக்கள், கணினி விஷன் மற்றும் 3D இமேஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை நடைபெறும் இடத்தை நேரலையில் கண்காணிக்கின்றன. இவை ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, திசுக்களின் அசைவுகளை முன்கூட்டியே கணித்து விடுவதால், அதற்கேற்ப தையல் போடும் முறையை எளிதாக மாற்றியமைக்கின்றன.
ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்யும் போது திசுக்களில் உண்டாகும் அழுத்தம் குறைக்கப்படுவதால், தழும்புகள் மற்றும் இரத்த இழப்பு குறையும்.
அறுவை சிகிச்சை செய்யும் போது எதிராபாராமல் நடக்கும் மனிதத் தவறுகளைக் குறைக்கவும், மிகக் கடினமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சைகளை எளிதாக செய்யவும் இந்தத் தொழில்நுட்பம் உதவும் என கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் அறுவை சிகிச்சைத் திட்டத்தை ஆராய்ந்து, ஒப்புதல் அளித்த பிறகே ரோபோக்கள் சுயமாக செயல்படும். எதிர்பாரா விதமாக சிகிச்சையின் போது சிக்கல்கள் ஏற்பட்டால், உடனடியாகத மருத்துவர்கள் தலையிட்டு ரோபோக்களின் செயல்பாட்டை மாற்றியமைக்கவோ அல்லது நிறுத்தவோ முடியும்.
உடலில் உள்ள திசுக்களின் மென்மை மற்றும் உட்புற அமைப்புகளை ரோபோக்கள் மிகத் தெளிவாக புரிந்து கொண்டு செயல்படுகின்றன. இதனால் மருத்துவத் துறையில் ரோபோக்கள் செய்த இந்த அறுவை சிகிச்சை சரித்திரம் பேசும் சாதனையாக கருதப்படுகிறது.