
ஆர்.ஆர்.பி லோகோ பைலட் தேர்வுகள் தொழில்நுட்ப கோளாறால் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் நேரடியாக தேர்வு எழுத சென்ற தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நவீன காலத்தில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல இளைஞர்கள் அரசு வேலைக்கு முயற்சித்து வருகிறார்கள். மத்திய அரசு, மாநில அரசு என அரசு வேலைக்கு பலரும் மாத கணக்கில் படித்து தேர்வுக்காக தான் காத்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், இன்று (மார்ச் 19) நடைபெறவிருந்த ஆர்.ஆர்.பி லோகோ பைலட் தேர்வுகள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்திய ரயில்வே துறையில், வேலைக்கு செல்ல வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக உள்ளது. சமீபத்தில் ரயில்வே துறையில் காலியாக உள்ள 18,799 லோகோ பைலட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இதற்கான முதற்கட்ட எழுத்து தேர்வில் 25,271 பேர் தேர்ச்சியடைந்தனர். இவர்களுக்கான இரண்டாம் நிலை எழுத்து தேர்வு இன்று நடைபெற இருந்தது.
முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வுக்கு ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்கள் பல மாநிலங்களுக்கு தேர்வெழுத சென்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால், தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் ஒத்திவைக்கப்பட்ட ஆர்.ஆர்.பி தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.