

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரபல ஐ.ஐ.டி. கல்லூரியில் கடந்த 2000-ஆம் ஆண்டு படித்த மாணவா்கள் தங்கள் கல்வி நிறுவனத்துக்கு ரூ.100 கோடி நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் பிரபல ஐ.ஐ.டி. கல்லூரி உள்ளது. நாட்டின் முதல் ஐ.ஐ.டி.யான இந்தக் கல்லூரியில் 2000-ம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவர்கள் இன்மொபி, கிளான்ஸ், நோபுரோக்கர் உள்ளிட்ட புத்தாக்க நிறுவனங்களை தொடங்கி சிறந்த தொழில்முனைவோர்களாக செயல்பட்டு வருகிறார்கள். மேலும் பலர் மெட்டா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெருநிறுவனங்களில் வேலை பார்க்கிறார்கள்.
இந்தநிலையில் தாம் படித்த கல்லூரியின் மேம்பாட்டுக்காகவும் புதிய கட்டிடம் ஒன்றை கட்டுவதற்காக அவர்கள் ரூ.100 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர்.
இந்த நிதி, எதிர்கால மாணவர்களுக்கு மேம்பட்ட தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை வழங்கும் மில்லினியம் ஸ்கூல் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சொசைட்டி (MSTAS) ஐ நிறுவும்.
இது தொடா்பாக கான்பூா் ஐஐடி சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘ஒரு குறிப்பிட்ட கல்வியாண்டில் படித்த மாணவா்கள் இவ்வளவு அதிகமாக கல்வி நிறுவனம் ஒன்றுக்கு நன்கொடை அளிப்பது இதுவே முதல்முறை. இந்தியாவில் வேறு எந்த கல்வி நிலையத்திலும் முன்னாள் மாணவா்கள் ஒரே நேரத்தில் தங்கள் கல்வி நிலையத்துக்கு இவ்வளவு அதிக தொகையை நன்கொடையாக அளிக்கவில்லை. கான்பூா் ஐஐடி-யில் 2000-ஆம் ஆண்டு படித்த மாணவா்கள் வரலாறு படைத்துள்ளனா்’ என்று கூறப்பட்டுள்ளது.
ஐஐடி கான்பூரின் இயக்குனர் பேராசிரியர் மணிந்திர அகர்வால், ‘இது முன்னாள் மாணவர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையிலான பிரிக்க முடியாத பிணைப்புக்கு வலுவான சான்று" என்றும், இது கல்வி மற்றும் ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும் மற்றும் புதுமைக்கான புதிய பாதைகளை அமைக்கும்’ என்று கூறினார்.
ஏற்கெனவே சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் கடந்த ஏப்ரலில் தாங்கள் படித்த கல்லூரிக்கு ரூ.200 கோடி நன்கொடை அளித்தது குறிப்பிடத்தக்கது.