
தமிழக அரசு பெண்கள், பள்ளி மாணவிகள், முதியோர்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தி வருகிறது. அதேபோல் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்தான காலை உணவு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சீருடை, காலணிகள், புத்தகப்பை, கணித உபகரணப்பெட்டி (6-10 வகுப்பு), வண்ணப் பென்சில்கள் (3-5 வகுப்பு), மற்றும் வண்ணக் கிரையான்கள் வழங்கப்படுகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று, உயர்கல்வியில் சேர்ந்த பெண் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- பட்டப்படிப்பு முடியும் வரை வழங்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி, கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வரிசையில் தற்போது கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவியருக்கு என்ற தனித்திட்டம் ஒன்றையும் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. தமிழக அரசு சிறுபான்மை நலத்துறை சார்பில், கிராமப்புற சிறுபான்மை மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும், யாரெல்லாம் இந்த திட்டத்தில் சேர முடியாது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
வசதியின்மை, கிராமங்களில் உயர்நிலை பள்ளிக்கூடங்கள் இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களால் கிராமப்புறங்களில் உள்ள பெண் பிள்ளைகள் படிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு, பெண் குழந்தைகளின் கல்வி இடைநிறுத்தம் குறையும் வகையில், சிறுமிகள் பள்ளியில் தொடர்ந்து பயில ஊக்குவிக்கவும், பெற்றோர் பொருளாதார சுமையை குறைக்கவும், கிராமப்புற பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கவும் இத்திட்டத்தை இந்த அமல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு 2024-2025 கல்வியாண்டில் ரூ.149.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பல லட்சக்கணக்கான சிறுபான்மை மாணவிகள் பயன்பெறுவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தகுதிகள், யாருக்கெல்லாம் கிடைக்காது :
இந்த திட்டத்தில் பயன்பெற மாணவியருக்கு சில தகுதிகளும் விதிக்கப்பட்டுள்ளது. அவை
* அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு மட்டுமே 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
* மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு ரூ.500 ஊக்கத்தொகையும், 6-ம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
* கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மட்டுமே இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்.
* இந்த ஊக்கத்தொகையை பெறுவதற்கு மாணவியின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டியது கட்டாயம். ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மேல் இருப்பவர்கள் இந்த திட்டத்தில் பலன் பெற முடியாது.
* மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினை சேர்ந்த மாணவிகளுக்கு மட்டுமே இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். மற்ற பிரிவினருக்கு கிடைக்காது என கூறப்பட்டுள்ளது.
* அதேசமயம், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களின் பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
* ஒரு குடும்பத்தில் எத்தனை பெண் குழந்தைகள் இருந்தாலும், இரண்டு பெண் குழந்தைகள் வரை மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் மாணவிகள் அந்தந்த ஊர்களில் உள்ள சம்பந்தப்பட்ட கிராமப்புற அரசு, அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களை அணுகி உங்களுடைய விவரங்களை அளிக்க வேண்டும். பின்னர் அவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்து தமிழக அரசு சார்பில் அவர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.