
நாட்டில் பெண்களின் முன்னேற்றத்தைக் குறிக்கோளாக கொண்டு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அவ்வகையில் பெண்களை சுயதொழில் செய்வதற்கு உதவித்தொகை அளித்து உதவ மத்திய அரசு நடவடிக்கை வருகிறது. இதன்படி தற்போது பீகார் மாநிலத்தில் 75 இலட்சம் பெண்களுக்கு சுயதொழில் தொடங்க ரூ.10,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எண்ணற்ற பெண்கள் பலன் பெறுவதோடு, சமூகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள பெண்களுக்கு நல்வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் ‘முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம்’ தற்போது அமலுக்கு வந்துள்ளது. வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. இத்திட்டத்தின் படி சுயதொழில் தொடங்க 75 இலட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.10,000 நிதியுதவி வரவு வைக்கப்பட்டது.
பீகாரில் வருகின்ற நவம்பர் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தற்போது இம்மாநிலத்தில் பல புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது பெண்களை சமூகத்தில் முன்னேற வைக்கவும், அவர்களை தொழில்முனைவோராக மாற்றவும் மாநில, மத்திய அரசுகள் முடிவு செய்துள்ளன. ஏற்கனவே பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பெண்கள் தொழில் தொடங்க நிதியுதவி அளிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக ஒரு குடும்பத்திற்கு ஒரு பெண் என்ற அடிப்படையில் 75 இலட்சம் குடும்பங்களுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தப் பணம் பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு பெண்கள் தொழில் தொடங்குவதற்கான ஆரம்ப கட்டப் பணிகளைத் தொடங்கலாம்.
தொழிலை சிறப்பாக வழிநடத்தி வரும் பெண்களுக்கு, அடுத்த கட்டமாக தொழிலை விரிவுபடுத்த ரூ.2 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு வழங்கிய நிதியுதவியைக் கொண்டு விவசாயம், சிறுதொழில்கள், கால்நடை வளர்ப்பு, தையல், நெசவு மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு உட்பட தாங்கள் விரும்பும் எந்தத் தொழிலையும் தொடங்கலாம்.
மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசுகையில், “மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் பெண்கள் நிச்சயமாக முன்னேறுவார்கள். இன்னும் சில ஆண்டுகளில் நாட்டிலேயே அதிக இலட்சாதிபதி சகோதரிகள் பீகாரில் தான் இருப்பார்கள். பீகார் பெண்களுக்கு தற்போது இரண்டு சகோதரர்கள் உள்ளனர். ஒருவர் நிதீஷ் குமார்; மற்றொருவர் நரேந்திர மோடி.
மத்திய அரசு தொடங்கிய வீடு கட்டும் திட்டம் உலகளவில் பிரபலமாகியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்களின் வாழ்க்கை மேம்பட்டுள்ளது. அதேபோல் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலமும் பெண்களின் வாழ்க்கை அதிவேகமாக மேம்படும். பெண்கள் வாழ்க்கையில் முன்னேறினால் ஒட்டுமொத்த நாடும் முன்னேறும்” என்று பிரதமர் மோடி கூறினார்.