
சென்னையில் கடந்தாண்டு இறுதியில் ஒரு சவரன் தங்கம் ரூ.59 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில் இந்தாண்டு ஆரம்பம் முதலே எந்த வருடமும் இல்லாத அளவில் தங்கம் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டே இருக்கிறது. வரலாறு காணாத வகையில் கடந்த 9 மாதங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.21 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.85,120க்கு விற்பனையானது. அதாவது, காலையில் ரூ.560 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, சவரனுக்கு ரூ.1120 அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் (செப்டம்பர் 22,23-ம்தேதி) மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,240 அதிகரித்துள்ளது சாமானிய மக்கள் மற்றும் பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இப்படி தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருவதால், இனிமேல் தங்கம் வாங்கவே முடியாதோ என்ற கவலை ஏழை எளிய மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தங்கம் விலை விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டு விடக்கூடும் என்று தங்கநகை வியாபாரிகள் கூறிவரும் நிலையில், அது உண்மையாகும் வகையில் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
தங்கம் விலை உயர்வுக்கும் உலக அளவில் பல நாடுகள் சந்தித்து வரும் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனைகள், நாடுகளுக்கு இடையே போர் போன்ற பல்வேறு காரணங்களாக சொல்லப்பட்டு வந்தாலும், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்வுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
அதாவது, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இருந்து தொடர்ந்து வரும் அதிரடி அறிவிப்புகளும், அதிரடி நடவடிக்கைகளும் இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும். கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வருவது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில்,
தங்கம் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், திடீரென கடந்த இரு நாட்களாக தங்கம் விலை உயர்வுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 'எச் 1 பி' விசா கட்டணத்தை உயர்த்தியது, தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்று கூறினார். மேலும் சர்வதேச முதலீட்டாளர்கள், பாதுகாப்பு கருதி தங்கத்தில் தொடர்ந்து அதிகளவில் முதலீடு செய்கின்றனர். எனவே, வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்றார்.
டிரம்பின் இந்த அறிவிப்பு உலக பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதுடன், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று வேலை பார்க்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம்.