தற்போது கடுமையான வெயில் தாக்கும் கோடை காலம் தொடங்கிவிட்டது . வெப்பத்தின் தாக்கத்கத்தால் குறையும் உடலின் நீர்ச்சத்து தேவைக்காக கடின உணவு வகைகளை குறைத்து பழங்கள் பக்கம் மக்கள் கவனம் திருப்பி விட்டது.
தர்பூசணி ,முலாம்பழம், சப்போட்டா, வாழை என பழங்கள் மூலம் குளுமையைத் தேடி வரும் வேளையில் இந்த கோடைகால சீசன் பழமான மாம்பழம் அனைவரின் பிரியத்துக்கு உரியதாக உள்ளது. பழங்களின் அரசன் என சொல்லப்படும் மாம்பழத்தின் சுவை வயது பாகுபாடு இன்றி அனைவரையும் கவர்ந்திழுக்கும் .
ஆனால் தற்போது இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட மாம்பழங்கள் வரத்து குறைந்து அதிக லாபம் வேண்டி ரசாயனங்கள் மூலம் துரிதமாக பழக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் கடைகளில் விற்பனைக்கு உள்ளது . இந்த மாம்பழங்கள் தரும் உடல் நலத் தீமைகளே அதிகம்.
மரத்தில் நன்கு விளைந்து முற்றிய மாம்பழங்கள் அறுத்த பின்னர் தானாக பழுக்க நிச்சயமாக இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். பழங்களின் தன்மை பொறுத்து இயற்கை முறையில் பழுக்க ஒரு வாரம் கூடத் தேவைப்படும். ஆனால் உணவுகளில் கலப்படம் இருப்பது போல மாம்பழங்களையும் துரிதமாக பழுக்க வைக்கும் தவறான முறைகள் பயன்படுத்தப்படுகிறது.
செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட பழங்களில் இயற்கையாக பழுத்த மாம்பழம் போல சுவை, மணம், சத்துகள் இருக்காது. இவற்றின் சுவை மற்றும் சத்து குறைவுடன் முழுவதும் மஞ்சள் நிறமாகவும் உள்ளே கடினமாக இருக்கும்.
சுவை குறைவாக இருக்கும். பார்க்க வெளியில் அழகாக இருந்தாலும் உள்ளே பச்சையாக இருக்கும்.
மேலும் கால்சியம் கார்பைடு, எத்திலீன் போன்ற தவறான ரசாயனங்கள் தெளிக்கப்பட்டு பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைவலி, மயக்கம், தோல் ஒவ்வாமை மற்றும் பல தீமைகள் ஏற்படும்.
சில ரசாயனங்கள் நரம்பு அமைப்பையும் பாதிக்கலாம். மென்மையான உடல் அமைப்புள்ளவர்களுக்கு அரிப்பு, சிவப்பு போன்ற நீண்டகால பாதிப்புடன் தரமற்ற ரசாயனங்கள் தொடர்ந்து உடலில் சென்றால் கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கும் வாய்ப்பும் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில் இது போன்ற ரசாயன மாம்பழங்களைத் தடை செய்ய அரசு மற்றும் சுகாதாரத்துறை பல வழிகளில் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது அதிக லாபத்திற்காக ரசாயனம் கலந்து செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்த விற்பனை செய்தால் ரூபாய் 5000 அபராதம் என்றும் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடும் கடைகளின் உணவு பாதுகாப்பு துறை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் எனவும் தமிழக அரசு கடை விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரசாயனத்தினால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை நம்மால் எளிதில் அடையாளம் காண முடியும். எனினும் மாம்பழங்களை ரெகுலராக வாங்கும் நம்பகமான கடையில் வாங்கவும். அவற்றை நமது வீட்டில் 1அல்லது 2 நாள் வைத்து பழுத்ததும் நன்றாக கழுவி சாப்பிடவும் பயன்படுத்தவும். இயற்கையாக பழுத்த பழங்களை தேர்வு செய்வது நமது நலன் காக்கும்.