

தமிழக சட்டமன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் மிசா சிறைவாசம் தொடர்பாக , முதல்வர் விஜய் உள்ளிட்ட தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் விமர்சித்து பேசியதில் இருந்து , இரு கட்சிகளுக்கும் இடையிலான மோதல் அதிகமாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் திமுகவின் அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதி தவெக ஆட்சி கவிழும் என்று பேசியது சூட்டை கிளப்பி உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம், தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை அறிவித்திருந்தது. வரும் அக்டோபர் மாதம் 6- ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமாரவேல், தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற சத்தியபாமா ஆகியோருடன் மேலும் சில அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு , தவெகவில் இணைந்து கொண்டனர்.
இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தமாக 7 சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் , மற்ற தொகுதிகளில் வழக்கு காரணமாக இடைத் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்த தொகுதிகளுக்கு மட்டும் இந்திய தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் அறிவித்துள்ளதால் , தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த இடைத்தேர்தல் ஆளும் தமிழக வெற்றி கழகத்திற்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் , அதிமுகவிற்கும் மிகவும் முக்கியமான தேர்தலாகும்.
இந்த இடைத்தேர்தலில் பெற போகும் வெற்றியை வைத்து தான் , தமிழக அரசியலில் எதிர்காலமும் நிர்ணயிக்கப்படும். இந்த தேர்தலில் தவெக வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எதிர்க்கட்சிகள் சார்பில் மக்கள் சிந்தனையின்றி தவெகவிற்கு வாக்களித்துவிட்டு தற்போது வருத்தப்படுவதாக திமுக மற்றும் அதிமுக சார்பில் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. இதை முறியடிக்க வேண்டும் என்றால் கட்டாயம் தவெக வெற்றி பெற்றாக வேண்டும்.
அதிமுகவிற்கு தங்களது சட்டமன்ற உறுப்பினர்களை தக்க வைக்க வேண்டுமென்றால், இந்த இடைத்தேர்தலில் ஒரு தொகுதியிலாவது அந்தக் கட்சி வெற்றி பெற்றாக வேண்டும். ஏற்கனவே அந்த கட்சி தலைமையின் மீதான அதிருப்தியில் ஏராளமான முக்கிய தலைவர்கள் வேறு கட்சிக்கு சென்று விட்டனர். தற்போது இருக்கும் சிலரும் இந்த தேர்தல் முடிவை பொறுத்து தான் அதிமுகவில் தொடர்வார்கள்.
திமுகவிற்கும் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் தலைவரான முக. ஸ்டாலினும் பொதுச் செயலாளரான துரைமுருகனும் சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்றுள்ளதால், தங்களது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த கட்சியும் உள்ளது. இடைத்தேர்தலில் திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வழக்கறிஞர் ஐ.பரந்தாமனும் , தாராபுரம் தொகுதியில் திமுக மகளிர் அணியைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.சுகன்யா ஆகியோரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை மதுராந்தகம் தொகுதியில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய, திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ்.பாரதி , சட்டமன்றத்திற்கு பரந்தாமன் போன்ற ஒரு ஆள் தேவை , "இவர் மட்டும் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றால் வருகின்ற ஜனவரி மாதத்திற்குள் தவெக ஆட்சி கவிழும்". நான் யாரையும் தவறாகவும் இழிவுபடுத்தியும் பேசவில்லை.
தமிழ்நாட்டின் தலையெழுத்து என் முன்னாள் இங்கு அமர்ந்திருக்கக்கூடிய திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களின் கையில் தான் இருக்கிறது. கலைஞர் , முக.ஸ்டாலின் ஆகியோரை தவெக இழிவுப்படுத்திப் பேசியதை மனதில் வைத்துக் கொண்டு இடைத்தேர்தலில் நாம் பணியாற்ற வேண்டும். 21 நாட்கள் மனதில் வைராக்கியம் வைத்து நாம் வேலை செய்தால் பரந்தாமன் வெற்றி பெறுவது உறுதி.
மிசாவின் வரலாறு மதுராந்தகத்தில் தான் தொடங்கியது. இன்றைய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மிசாவின் வரலாறு தெரியாது. துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஸ்டாலின், என்னைப் போன்றவர்கள் தான் அதன் கொடூரத்தை நேரில் பார்த்தவர்கள்" என்று பேசியிருக்கிறார். ஜனவரிக்குள் தவெக அரசு கவிழும் என்ற பாரதியின் பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.