ரஷ்யாவில் உள்ள ஒரு நகரம் மக்கள் தொகையை அதிகரிக்க ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அந்தத் திட்டத்தால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
முன்பெல்லாம் ஒரு நபர் 10 குழந்தைகள் வரை பெற்று வளர்த்தனர். ஆனால், படிபடியாக இந்த எண்ணிக்கை குறைந்து தற்போது ஒரு குழந்தையில் வந்து நிற்கிறது. இன்றைய காலக்கட்டத்தில் ஒரு குழந்தையை படித்து ஆளாக்கி வளர்ப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிடுகிறது.
இதனால் மக்கள் தொகை குறைந்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளில் ஏற்கனவே இந்த அச்சம் வந்துவிட்டது.
ஆம்! தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தங்கள் நாட்டின் மக்கள் தொகை குறைந்து வருவதாக சீனா அறிவித்துள்ளது. 2024இல் மக்கள் தொகை 14 லட்சம் குறைந்து 140 கோடியே 8 லட்சமாக இருந்தது என்கிறது சீன அரசு.
இந்த நிலை சீனாவில் மட்டுமல்ல ஜப்பன், தென்கொரியா, ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது.
அதேபோல்தான் ஹங்கேரியிலும் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால் மக்கள் தொகை எண்ணிக்கை பின்னடைவை சந்தித்து வருகின்றது.
இந்நிலையில் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த நாடு வரி விலக்குகளை அறிவித்தது.
அதேபோல் ரஷ்யாவிலும் மக்கள் தொகை குறைவாகி வருகிறது. இதனால், ரஷ்யாவின் ஒரியோல் நகரம் பல நடவடிக்களை மேற்கொண்டு வருகிறது.
ஏனெனில், அந்த நகரத்தில் 8 ஆயிரம் பேர் மட்டுமே இருக்கிறார்கள். இதற்கு காரணம் அங்கு பிறப்பு விகிதம் குறைந்ததுதான்.
இதனால், முன்பே ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டது. இளம்பெண்கள் கர்ப்பம் தரித்தால் அவர்களுக்கு 1,000 பவுண்டுகள் (சுமார் ரூ.1 லட்சம்) அளிக்கப்படுவதாக புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒரே நிபந்தனை, அந்த பெண் 12 வாரங்கள் கர்ப்பமாக இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்பதுதான்.
தற்போது இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்திருக்கிறார்கள். அதாவது கல்லூரியிலிருந்து பள்ளி மாணவர்கள் வரை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு 100,000 ரூபிள்கள் (சுமார் 920 பவுண்டுகள்) வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக எந்தவொரு குறைந்தபட்ச வயது வரம்பும் இல்லை என்பதே முக்கிய அம்சமாகும், இது பல்வேறு சர்ச்சைகளையும் எழுப்பியுள்ளது.
பெண்கள் எந்தவொரு வயதிலும் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றால், அவர்களுக்கு அரசு ஆதரவு அளிக்கும் என்ற நிலைப்பாட்டுடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.