

இந்து மதத்தின் பாரம்பரிய மிக்க ஆலயங்களில் முக்கிய இடத்தில் உள்ளது கேரளாவின் சபரிமலை ஐயப்பன் (Sabarimala Temple)கோவில். கடுமையான விரதம் மற்றும் வழிபாட்டு முறைகள் கொண்டுள்ள இக்கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள்(மாதவிடாய் வயது) வரக்கூடாது எனும் தடை பாரம்பரிய நடைமுறையாக பல ஆண்டுகளாக கூறப்பட்டு வந்ததுடன் அது சட்டதிட்டமாகவே கடைபிடிக்கப் பட்டு வருகிறது.
இந்நிலையில் பெண்கள் மீதான விழிப்புணர்வு பெருகி அனைத்திலும் சம உரிமை எனும் விவாதங்கள் துவங்கியது. 2006-ல் Indian Young Lawyers Association சார்பில் பெண்களை வயது அடிப்படையில் தடை செய்வது அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவ உரிமை (Article 14),மதச்சார்பற்ற உரிமை (Article 25)
மீறுவதாக கூறி மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விவாதங்கள் நடைபெற்று இறுதியில் (Supreme Court of India) 2018 செப்டம்பர் 28-ம் தேதி 2018 உச்சநீதிமன்ற தீர்ப்பாக வயது அடிப்படையிலான தடை அரசியலமைப்புக்கு முரண்பாடு எனவும் “பாரம்பரியம்” என்ற காரணம் சமத்துவ உரிமையை மீற முடியாது என்றும் குறிப்பிட்டு அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என அனுமதி அளித்தது .
இந்த தீர்ப்பு அப்போது மிகப்பெரிய அதிர்வலைகளை பக்தர்களிடையே ஏற்படுத்தி பெரும்பாலான போராட்டங்களுக்கு வித்திட்டது.இந்த தீர்ப்புக்கு எதிராக பல மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2018 தீர்ப்பு இன்னும் செல்லுபடியாகாமல் இறுதி விளக்கம் (larger bench) நிலுவையில் உள்ள நிலையில் 2019-ல் நீதிமன்றம் தீர்ப்பை உடனடியாக மாற்றாமல், இதுபோன்ற மத நடைமுறைகள் தொடர்பான பெரிய அரசியலமைப்பு விசாரணைகள் நிமித்தம் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது. இதனால் உச்ச நீதிமன்றம் 9 நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் மூலம் சாத்தியமான அரசியலமைப்பு மற்றும் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து சபரிமலை மற்றும் பிற மத தலங்களில் பெண்கள் அனுமதியை பற்றி மீண்டும் பரிசீலிக்கிறது.
அனைத்து பெண்களுக்கும் அனுமதி எனும் தீா்ப்புக்கு எதிராக மறுஆய்வு மற்றும் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நீண்ட காலத்திற்கு பின்னர் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. .
அப்போது பேசிய தலைமை நீதிபதி, இந்த வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதிமுதல் விசாரணையைத் தொடங்கும் எனத் தெரிவித்தார். மேலும், தலைமை நீதிபதியின் உத்தரவில் “தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோருபவர்களின் மனுக்கள் ஏப்ரல் 7 முதல் 9 வரையிலும், எதிர்ப்பவர்களின் மனுக்கள் ஏப்ரல் 14 முதல் 16 வரையிலும் நடைபெறும். இறுதி வாதங்கள் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கூறிய நேர அட்டவணையை அனைத்து தரப்பினரும் கடைபிடிக்க வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர்கள் மார்ச் 14ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை மட்டுமின்றி மசூதியில் முஸ்லிம் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான வழக்குகளும் சேர்த்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
விரைவில் வரப்போகும் 2025–26 சட்டமன்றத் தேர்தல்கள் காரணமாக இந்த வழக்குகள் அரசியல் கருத்து அடிப்படையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னரே கம்யூனிஸ்ட் (Communist Party of India (Marxist)) மற்றும் அதன் கூட்டணி LDF ஆகியவை முதலில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஒருமுறை ஆதரவு தெரிவித்திருந்தாலும் தற்போது சபரிமலை வழக்கில் மத பக்தர்களின் உணர்வுகளையும் மதிப்பது முக்கியம் என்று மெல்ல மாறிய நிலைப்பாட்டை காண்பிப்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே இந்த விஷயத்தில் அரசின் மாறிய நிலைப்பாடு அல்லது ஆதரவு தொடர்ந்துள்ளதா என்பது குறித்து அரசின் தற்போதைய பதிலுடன் தெளிவாக சொல்லப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் சொல்லும் நிலையில் மதரீதியான இந்த வழக்கின் போக்கை இந்தியா முழுவதும் உற்றுக் கவனிக்கப்படுகிறது.