சபரிமலையில் பெரும் சர்ச்சை: தங்கத் திருட்டில் தந்திரி கைது.!
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், துவாரபாலக தங்க சிலையில் தங்கம் திருடப்பட்ட விவகாரம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது தந்திரி ராஜீவ் கண்டரூ கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்ட வழக்கை சிறப்பு புலனாய்வு குழு (SIT) விசாரித்து வருகிறது. பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, தங்கம் திருடிய வழக்கில் கோயில் தந்திரி ராஜீவ் கண்டரூவுக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் ஐயப்பனை எந்த அளவிற்கு பக்தியுடன் வழிபடுகிறார்களோ, அதே அளவு மரியாதைக்கு உரியவராக இருப்பவர் தான் தந்திரி. சபரிமலை கோயிலைப் பொறுத்தவரை பரம்பரை பரம்பரையாக ‘தாளம்’ குடும்பத்தினரைச் சார்ந்தவர்கள் தான் தந்திரியாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அவ்வப்போது மாறி மாறி தந்திரியாக செயல்படுவது வழக்கம். அவ்வகையில் கடந்த ஒரு சில ஆண்டுகளாக சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரியாக ராஜீவ் கண்டரூ செயல்பட்டு வருகிறார்.
சபரிமலையில் எது நடக்க வேண்டும் என்றாலும், அதற்கு தந்திரியின் அனுமதி அவசியம். இவர் ராஜீவ் கண்டரூ தலைமையில் தான் கடந்த சில ஆண்டுகளாக சபரிமலையில் அனைத்து நிகழவுகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இவர் தநதிரியாக இருக்கும் போது தான், உன்னிகிருஷ்ணன் என்பவர் முதன்முறையாக சபரிமலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வருடம் சபரிமலை சீசன் தொடங்கப்பட்ட சில நாட்களில் துவார பாலகர் கவச சிலையில் தங்கம் திருடப்பட்ட விவகாரம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஐயப்ப பக்தர்கள் மத்தியில் இதுவொரு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இன்னும் ஒரு சில நாட்களில், அதாவது ஜனவரி 14-ஆம் தேதி மாலை சபரிமலையில் மகரவிளக்கு தரிசனம் நடைபெற இருக்கிறது.
சபரிமலையில் வருடந்தோறும் நடைபெறும் முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தந்திரி ராஜீவ் கண்டரூ கைது செய்யப்பட்டு இருப்பது, சபரிமலை சமஸ்தானத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்பட்டு வருகிறது.
சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு தொடர்பாக ஏற்கனவே இரண்டு முறை சிறப்பு புலனாய்வு குழு மற்றும் அமலாக்கத்துறை சார்பில் விசாரணைக்காக ராஜீவ் கண்டரூ அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ராஜீவ் கண்டு கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தவிர விசாரணை மேலும் தொடரும் எனவும், சம்பந்தபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. தந்திரி ராஜீவ் கண்டரூவை கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் மீட்கப்பட்ட தங்கத்தை காட்டிலும், கூடுதலாக தங்கம் திருடப்பட்டிருக்கலாம் என சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே சபரிமலை அபிஷேக நெய் விவகாரத்தில் ரூ.16 லட்சம் முறைகேடு நடந்துள்ள நிலையில், தங்கத் திருட்டு விவகாரமும் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

