

உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த கார்த்திகை 1 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் மகர பூஜை சீசனும் தொடங்கி விட்டதால் சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில் ஐயப்ப பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த சபரிமலை தேவசம்போர்டு மற்றும் கேரள காவல்துறையினர் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் உடனடி முன்பதிவு டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை 5,000 ஆகவும் குறைத்துள்ளது தேவசம்போர்டு.
கட்டுக்கடங்காத கூட்டத்தில் பத்து வயதுக்கும் குறைவான குழந்தைகள் வழி தவறி செல்ல அதிக வாய்ப்புள்ளதால், அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு தற்போது க்யூஆர் கோட் வசதியை மீண்டும் கொண்டு வந்துள்ளது கேரள காவல்துறை.
கடந்த ஆண்டு ஐயப்பன் சீசனின் போது குழந்தைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, அவர்களின் கையில் குழந்தையின் பெயர், உறவினர் பெயர் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய க்யூஆர் கோட் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இந்த ஆண்டும் க்யூஆர் கோட் முறையை கொண்டு வந்துள்ளது கேரள காவல்துறை.
இதன்படி பம்பா நதிக்கரையில் இருந்து மலையேறும் போது, பத்து வயதுக்குள் குறைவான அனைத்து குழந்தைகளுக்கும் க்யூஆர் கோட் ஸ்டிக்கர் ஒட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் கட்டுக்கடங்காத ஐயப்ப பக்தர்களின் கூட்டத்தால், குழந்தைகள் பலர் வழி தவறி செல்கின்றனர். பலமுறை குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உடன் வந்தவரின் பெயரை அறிவித்தும் கூட, குழந்தைகளை அவர்களிடம் ஒப்படைக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனைத் தடுக்கும் விதமாகவே, சபரிமலை தேவஸ்தானத்துடன் இணைந்து தற்போது மீண்டும் க்யூஆர்கோடு வசதியை கொண்டு வந்துள்ளது கேரள காவல்துறை. இதன்படி பம்பா நதிக்கரையில் குழந்தைகள் கையில் ஒட்டப்படும் க்யூஆர் கோட் ஸ்டிக்கரை தரிசனம் முடிந்து, வாகனங்களில் ஏறும் வரை கழற்ற வேண்டாம் என கேரள காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சபரிமலையில் வழி தவறிய குழந்தைகளை அடையாளம் காணவும், அவர்களை உரியவர்களுடன் சேர்த்து வைக்கவும் இந்த க்யூஆர் கோட் வசதி பெருமளவு உதவும் என கேரள காவல் துறை தெரிவித்துள்ளது. குழந்தைகள் தவிர ஞாபகத்திறன் குறைவாக உள்ள முதியோர்களுக்கும் க்யூஆர் கோட் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.
தற்போது சபரிமலை வனப்பகுதியில் மழை பெய்து வருவதால், பக்தர்கள் யாரும் காட்டுப்பகுதியில் அமர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிகளில் அட்டைப் பூச்சிகளின் தாக்கம் அதிகளவு இருக்கும் என்பதால், தற்போது பிளாஸ்டிக் மழை கோட்டுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவற்றை மலைப்பகுதிகளில் விட்டுச் செல்லக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது