

கார்த்திகை மாதம் என்றாலே சபரிமலை சீசன் தான். உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் வருகை தருவது வழக்கம். தற்போது கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் தினசரி லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
நவம்பர் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. முதல் நாளிலேயே 50,000 க்கும் அதிகமான பக்தர்கள் சாமி ஐயப்பனை தரிசிக்க காத்திருந்தனர். நவம்பர் 17ம் தேதி அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஐயப்பன் சீசனின் முதல் நாளிலேயே ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக போலீசார் தெரிவித்திருந்திருனர்.
ஆன்லைன் புக்கிங் மூலம் கூட்டத்தை கட்டுப்படுத்தினாலும் ஸ்பாட் புக்கிங்கில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த பெண் பக்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சில பக்தர்கள், குழந்தைகள் என பலரும் மூச்சு திணறலால் அவதிப்பட்டதாக புகார் எழுந்தது. இது கேரள மாநிலத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தவே, பல கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் நிம்மதியாக சென்று ஐயப்பனை தரிசனம் செய்யவும் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தேவசம்போர்டு உத்தரவிட்டுள்ளது.
அதாவது உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை 5000 ஆக குறைக்கப்படுகிறது. 20,000 பேருக்கு ஸ்பாட் புக்கிங் அனுமதிக்கப்பட்ட நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்பாட் புக்கிங் நிலக்கல் மற்றும் வண்டிப்பெரியாறு மையங்களில் மட்டுமே நடைபெறும். பம்பா, எரிமேலி, செங்கனூரில் இயங்கி வரும் மையங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன. இந்த கட்டுப்பாடுகள் நவம்பர் 24ம் தேதி வரை தொடரும். நிலக்கல் பகுதியில் மட்டும் கூட்டத்தை கட்டுப்படுத்த 200 க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்பாட் புக்கிங் மூலம் பக்தர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. சிலர் குறுக்கு வழியில் பாஸ்களை பெற்றுச் செல்வதால் பலர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. புதன்கிழமை இரவு மூடப்பட்ட ஸ்பாட் புக்கிங் மையம் 7 மணி நேரம் இடைவெளிக்கு பிறகே திறக்கப்பட்டது. புதன்கிழமை இரவு 10 வரை 13,229 பேர் ஸ்பாட் புக்கிங் மூலம் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதே சமயம் ஆன்லைன் முன்பதிவு மூலம் 38,224 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.கட்டுப்பாட்டை மீறி வந்தவர்களுக்கு மறுநாள் தரிசனம் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பக்தர்கள் வனத்துறையிடமிருந்து பாஸ்களைப் பெற வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த பாஸ்களைப் பெறுவதற்கான நடைமுறை தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.