

தமிழ்நாடு (Tamil Nadu) அரசின் கீழ் செயல்படும் நியாய விலை (ரேஷன்) கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்து தமிழக அரசு புதிய அரசாணை (GO) வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பு நீண்ட காலமாக ஊதிய உயர்வு கோரி வந்த பணியாளர்களுக்கு முக்கிய தீர்வாக கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் சுமார் 37,000க்கும் மேற்பட்ட நியாய விலை (ரேஷன்) கடைகள் உள்ளன. இவை மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு கடையிலும் பொதுவாக 1 விற்பனையாளர் (Salesman)+ 1 எடையாளர் (Packer/Helper) என்ற கணக்கில் மொத்தம் சுமார் 70,000 – 75,000 ரேஷன் கடை பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். இந்நிலையில் ஊதிய உயர்வு , பொட்டலமாக பொருட்கள் வழங்குதல் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஊதிய மறுநிர்ணயம் குறித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு கட்டங்களில் தொழிற்சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த உயர்வு முடிவு செய்யப்பட்டது.
அதன் படி விற்பனையாளர்களுக்கு முதல் ஓராண்டுக்கான தொகுப்பூதியம் ரூபாய் 6,250 லிருந்து ரூபாய் 7,500 ஆக உயர்வு கட்டுநர்களுக்கான தொகுப்பூதியம் ரூபாய் 5,500 இல் இருந்து ரூபாய் 6,600 ஆக உயர்வு என்று கூறப்படுகிறது.
ஓராண்டு பணி முடித்தவர்களில் விற்பனையாளர்களுக்கு ரூ.9,900 முதல் ரூ.39,600 வரையும் கட்டுனர்களுக்கு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும் புதிய ஊதியக்கற்றையில் கால முறை ஊதியம் வழங்கப்படும்.மேலும் சிறப்புப்படியாக விற்பனையாளர்களுக்கு மாதம் ₹1,500, கட்டுநர்களுக்கு ₹1,200., 3% ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி ,பண்டிகை முன்பணம் மற்றும் வாடகை படிகள் போன்ற சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஊதிய உயர்வு மார்ச் 2026 முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.
புதிதாக நிர்ணயிக்கப்பட கூடிய அடிப்படை ஊதியத்தில் 55 சதவீதம் அகவிலைப்படி பெற அனுமதிக்கப்படுகிறது. பின்னர் அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது அரசு அறிவிக்கும் அகவிலைப்படி உயர்வு இப்பணியாளர்களுக்கும் பின்பற்றப்படும்.
தற்போது நடைமுறையில் இருக்கும் 3 சதவீதம் ஆண்டு ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும். அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் அல்லது சென்னை மாநகராட்சிக்குள் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு முறையே ரூ.1,500 மற்றும் ரூ.1,200 இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும்.
இதர பகுதிகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு முறையே ரூ.1,200 மற்றும் ரூ.1000 இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதம் அல்லது சென்னை மாநகராட்சிக்குள் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு முறையே ரூ.700 மற்றும் ரூ.600 இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும்.
இதர பகுதிகளில் அடிப்படையில் ஊதியத்தில் 4 சதவீதம் அல்லது முறையே ரூ.600 மற்றும் ரூ.500 இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும்.
1000 மற்றும் அதற்கு கீழ் குடும்ப அட்டைகள் உள்ள விற்பனையாளர்கள் ரூ.1,500, கட்டுனர்களுக்கு ரூ.1000 நியாயவிலைக்கடை படி வழங்கப்படும்.
1001 குடும்ப அட்டைகள் முதல் 1,500 குடும்ப அட்டைகள் உள்ள விற்பனையாளர்கள் ரூ.1,750, கட்டுனர்களுக்கு ரூ.1,250 நியாயவிலைக் கடை படி வழங்கப்படும்.
1501 மற்றும் அதற்கு மேல் குடும்ப அட்டைகள் உள்ள விற்பனையாளர்கள் ரூ.2000, கட்டுனர்களுக்கு ரூ.1,500 நியாயவிலைக்கடை படி வழங்கப்படும்.
விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு முறையே ரூ.300 மருத்துவப்படி வழங்கப்படும்.
மலைவாழ் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு மலைவாழ்படி மாதம் ஒன்றுக்கு அடிப்படை ஊதியத்தில் 20 சதவீதம் அல்லது அதிகபட்சம் மாதம் ஒன்றுக்கு ரூ.1,500 வழங்கப்படும். சராசரி கடல் மட்டத்தில் மலைவாழ்விட உயரம் 1000 மீட்டர் மேல் உள்ள பகுதிகளில் குளிர்காலபடி மாதம் ஒன்றுக்கு ரூ.400 வழங்கப்படும். இது குளிர் காலங்களில் மட்டும் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான போக்குவரத்துபடி தற்போது உள்ளவாறு ரூ.2,500 வழங்கப்படும். ஒரே பதவியில் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலையும், 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலையும் வழங்கி தலா ஒரு ஊதிய உயர்வு (3 சதவீதம்) வழங்கப்படும்.
ஒரே பதவியில் 30 ஆண்டுகள் பணி முடித்த பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதிய உயர்வாக (3 சதவீதம்) ஒரு ஊதிய உயர்வு வழங்கப்படும்.
இந்த ஊதிய உயர்வு ரேஷன் கடை பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கையான ஊதிய மாற்றத்தை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து ஊதியத்தை மறுநிர்ணயம் செய்து கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சலுகைகளை தொடர்ந்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.