தீயணைக்கும் போதே வெடித்த சிலிண்டர்! அலறியடித்து ஓடிய தீயணைப்பு வீரர்கள்! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!

கேளம்பாக்கம், சேலத்தில் மின்கசிவால் வெடித்த சிலிண்டர் விபத்து | முழு விவரம்
சிலிண்டர் விபத்து
Cylinder Accident
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான வீடுகளில் உணவு சமைக்க கேஸ் சிலிண்டர் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிலிண்டரின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பான விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது.

வீட்டில் ஏற்படும் மின்கசிவு, சிலிண்டர்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணமாகும். இந்நிலையில் நேற்று இரவு கேளம்பாக்கம் மற்றும் இன்று காலை சேலம் வாழப்பாடி என இரண்டு இடங்களில் மின்கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 கூரை வீடுகள் தீக்கிரையாகின. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முற்பட்ட போது திடீரென சிலிண்டர் வெடித்து சிதறியக் காட்சி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பழனிச்சாமி என்பவரின் வீட்டில் இன்று காலை திடீரென கரும்புகை வெளி வந்தது. இதனை கவனித்த பழனிச்சாமி உடனடியாக அக்கம் பக்கத்தினர் மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார்.

தீயணைப்பு துறையினர் வருவதற்குள் வீட்டில் தீப்பற்றிக் கொண்ட நிலையில் குபுகுபுவென தீ எரிந்தது. இதனைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்தவுடனேயே தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். தீயை அணைத்துக் கொண்டிருக்கும் போதே வீட்டிலிருந்த ஒரு சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியதால், தீயணைப்பு வீரர்கள் பதறியடுத்து ஓடினர்.

மின் கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து வீட்டில் இருந்த சிலிண்டரும் தீக்கிரையாகி வெடித்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் பரவி வருகின்றன. அதில் தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது, திடீரென வெடிக்கும் சிலிண்டரைக் கண்டு பதறி அடித்து ஓடும் காட்சி காண்போரை நடுங்க வைக்கிறது.

இந்த விபத்தில் வீட்டில் உள்ள அனைத்து பொருள்களும் சேதமானதுடன், இரண்டு கூரை வீடுகளும் முழுமையாக தீக்கிரையாகின. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதுமில்லை.

இதையும் படியுங்கள்:
மக்களே உஷார்.!! 16,577 ஆக உயர்ந்த டெங்கு பாதிப்பு: தற்காத்துக் கொள்வது எப்படி?
சிலிண்டர் விபத்து

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தையூரில் அடுக்குமாடி குடியிருப்பில் 11-வது மாடியில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறிய சிலிண்டரின் சிசிடிவி காட்சியும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சிலிண்டரில் ஏற்பட்ட வாயுக் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதுமில்லை.

இருப்பினும் வீட்டில் சிக்கிக் கொண்ட 15 மகளை மீட்க சென்ற தந்தைக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. சிறுசேரி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சமையலறையில் மின் சாதனங்களுக்கும் கேஸ் சிலிண்டர்களுக்கும் இடையே உள்ள மறைமுக ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிவது அவசியம். இதனை சரிசெய்வதன் மூலம் தீ விபத்து மற்றும் இழப்புகளிலிருந்தும் விபத்துகளிலிருந்தும் உங்கள் வீட்டைப் பாதுகாக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com