அட! அகிலேஷ் யாதவ் பிரதமர் ஆகணுமாம்!

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

பா.ஜ.க.வை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் “இந்தியா” கூட்டணி அமைத்தாலும், இன்னமும் அந்தக் கூட்டணிக்குள்ளே ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன. இந்தியா முழுக்க அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்களை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தி, பா.ஜ.க. வை வீழ்த்த வேண்டும் என்று ஊருக்கு ஊர் மேடை போட்டு, எதிர்க்கட்சித் தலைவர்கள் கை கோர்த்து மீடியாவுக்குப் போஸ் கொடுக்கும் காட்சி மீண்டும் மீண்டும் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது.

ஆனால், எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் யார் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னமும் ஒரு மித்த கருத்து ஏற்படவில்லை. ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியே கூட இன்னமும் வெளிப்படையாக இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. தி.மு.க. ஒன்றுதான் ராகுலைப் பிரதமராக ஏற்றுக் கொள்ளத் தயார் என்று வெளிப்படையான அறிவிப்பினை செய்துள்ளது.

இன்னொரு பக்கம் கழக உடன் பிறப்புக்கள் ஸ்டாலினுக்கு அடுத்த பிரதமராகத் தகுதி உள்ளது என்று மறைமுகமாக பெருமைப் பட்டுக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். நித்திஷ் குமாரை பிரதமராக ஏற்றுக் கொள்ளும் மனநிலை எந்தக் கட்சிக்கும் இப்போது இல்லை என்பது மட்டுமில்லை. அவரை இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக ஏற்றுக்கொள்ளக் கூட அவர்கள் தயாராக இல்லை என்பதும் கவனிக்கத் தக்கது. மம்தா பானர்ஜிக்கும் பிரதமர் நாற்காலியில் உட்கார ஆசைதான்.

இதெல்லாம் ஒரு பக்கம் என்றால், உத்திரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவுக்கும் பிரதமர் கனவு இருக்கிறது. அது, அண்மையில் அவரது பிறந்த நாளின்போது, லக்னௌவில் போஸ்டர்கள் மூலமாக வெளிச்சத்துக்கு வந்தது.

ஆம்! அகிலேஷ் யாதவ் புகைப்படத்தைப் போட்டு, “நாட்டின் வருங்காலத் தலைவர் மதிப்பிற்குரிய ஸ்ரீ அகிலேஷ் யாதவ் ஜி அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!” என்று போஸ்டர் அடித்து ஒட்டி இருப்பவர் சமாஜ்வாதிக் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ஃபக்ருல் ஹசன்.

மீடியாவினர் அகிலேஷிடம் இது பற்றிக் கேட்டபோது, அவர் தயக்கத்துடன், “ கட்சிக்காரர்கள் போஸ்டர் அடித்து ஒட்டுவதால் மட்டுமே ஒருவர் நாட்டின் பிரதமர் ஆகிவிட முடியாது” என்று நாசூக்காக பதில் அளித்தார்.

ஆனால், கட்சியியின் ஒரு பகுதியினர், “ நம்ம கட்சித் தலைவர் நாட்டோட பிரதமர் ஆவது கிடக்கட்டும்! 2022ல் நடந்த சட்ட மன்றத் தேர்தலில், வென்று முதலமைச்சர் ஆகும் வாய்ப்பையே நழுவ விட்டுவிட்டார்! அவர் முதலில் உ.பி. முதலமைச்சராக வரட்டும்! அப்புறம் டெல்லி பற்றிக் கனவு காணட்டும்!” என்று சற்று காட்டமாகவே விமர்சனம் செய்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com