
பிரபல தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களான சமந்தா ரூத் பிரபு, தமன்னா பாட்டியா மற்றும் ராகுல் ப்ரீத் சிங் ஆகியோரின் பெயர்களில் உருவாக்கப்பட்ட சில போலி வாக்காளர் அடையாள அட்டைகள் (Voter ID) இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த அடையாள அட்டைகளில் அவர்களின் சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் இருந்தது தான் இந்த வதந்திக்கு முக்கியக் காரணம்.
ஹைதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல், நவம்பர் 11 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த போலி வாக்காளர் அட்டைகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் அமைப்புகளில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆயினும் இந்த விஷயத்தில் போலி என்று கண்டறிய ஒரு துருப்பு சீட்டும் இருந்துள்ளது. மூன்று நடிகைகளின் வாக்காளர் அட்டைகளிலும் ஒரே முகவரி தான் இருந்துள்ளது. இதை வைத்து சிலர் யோசிக்க துவங்கினர். மூன்று பெரிய நடிகைகள் எப்படி ஒரே வீட்டில் தங்க முடியும்? என்ற கேள்விகள் சமூக வலைத் தளங்களில் கிளம்ப தொடங்கின.
தேர்தலை சீர்குலைக்க சிலர் இந்த தீய செயலை செய்துள்ளனர் என்று பலரும் பேச தொடங்கினர்.பின்னர், ஒரு பெரிய உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த வாக்காளர் அடையாள அட்டைகள் அனைத்தும் போலியானவை என்று அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி (GHMC) உடனடியாக களத்தில் இறங்கியது. அதன் அதிகாரி சையத் யஹியா கமல் , போலி வாக்காளர் அட்டை விவகாரம் குறித்து மதுரா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் பிரபல நடிகைகளின் பெயரில் போலி வாக்காளர் அட்டையை உருவாக்கி, சமூக ஊடகங்களில் பரப்பி , சிலர் இடைத்தேர்தலில் குழப்பம் விளைவிக்க செயல்படுவதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில், மதுரா நகர் காவல் துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கினர்.
இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகளில், மோசடி செய்தல் மற்றும் பொதுமக்களிடையே குழப்பம் விளைவித்தல் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போலிப் பதிவுகளை உருவாக்கியது யார்?அதை முதலில் சமூக ஊடகங்களில் பரப்பியது யார் என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்கு சரியான தண்டனையை வாங்கி தர காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் மற்றும் ஹைதராபாத் மாநகராட்சி அலுவலகம் ஆகியவை மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளன. வாக்காளர்கள் அரசின் அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து வெளியாகும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும். சமூக ஊடகங்களில் பரவும் இது போன்ற போலிச் செய்திகளைப் பார்த்து யாரும் ஏமாற வேண்டாம். இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், பொது மக்கள் யாரும் இந்த செய்திகளை பரப்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலைத் திசை திருப்பும் நோக்கத்துடன் தவறான செய்திகளைப் பரப்புபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.