சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார், பாஜகவில் ஒரு சாதாரண உறுப்பினராக இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் சுவாரசியம் என்னவென்றால், கடந்த 2016 இல் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த கரு நாகராஜன் என்பவர் சரத்குமாரால் நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கரு நாகராஜன் பாஜகவில் இணைந்து தற்போது மாநிலத் துணைத் தலைவராக இருந்து வருகிறார். பாஜகவில் இணையும் போது கரு நாகராஜன் சமத்துவ மக்கள் கட்சியை பற்றி விமர்சனக் கருத்துக்களை வெளியிட்டார்.
அதாவது, 9 ஆண்டுகளாக நாங்கள் சமத்துவ மக்கள் கட்சியில் இணைந்து அரும்பாடுபட்டு வேலை செய்தோம். சரத்குமார் ஒரு வட்டத்துக்குள்ளேயே இருந்து, மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில்லை. அதனால் நாங்களும் மக்களின் குறைகளுக்கு தீர்வு காண முடியாத நிலையில் இருந்தோம். அதன் காரணமாகவே தற்போது பாஜகவில் இணைகிறோம் எனத் தெரிவித்தார்.
தொடக்கத்தில் சாதாரண தொண்டனாக இருந்த கரு நாகராஜன் இப்போது பாஜகவில் மாநிலத் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் இணைக்கப்பட்டுள்ளது. சரத்குமாரும், கட்சியில் இருந்த அனைவருமே பாஜகவில் இணைந்துவிட்டனர்.
இப்போது சரத்குமார் சாதாரண உறுப்பினராகவே இணைக்கப்பட்டிருந்தாலும், விரைவில் அவருக்கு ஏதாவது பதவி கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது அவர் எதாவது ஒரு தொகுதியில் வேட்பாளராகவும் களமிறக்கப்படலாம். பாஜகவில் கூட்டணி வைப்பதற்காக பேசி வந்த சரத்குமார், இப்போது தன் கட்சியை கலைத்து மொத்தமாக பாஜகவில் இணைந்துவிட்ட சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த நிகழ்வைப் பார்க்கும்போது விஜய் சொன்ன வசனம் தான் ஞாபகத்திற்கு வருகிறது. “வாழ்க்கை ஒரு வட்டம், அதுல மேல போனவன் கீழே வருவான், கீழே இருக்கிறவன் மேல போவான்”. இந்த வசனம் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் விஷயத்தில் உண்மையாகிவிட்டது.