

கலைஞர்களுக்கு வழங்கப்படும் மதிப்பு மிக்க "யுவ புரஸ்கார்" (Yuva Puraskar) விருதை வாகை சந்திரசேகருக்கு அறிவித்தது ஒன்றிய அரசு. கலை , நடனம், நாடகம் நாட்டுப்புற கலைகளுக்கான யுவ புரஸ்கார் விருது அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சங்கீத நாடக அகாடமி சார்பில் வழங்கப்படும் ஒரு உயரிய தேசிய விருது ஆகும்.
சந்திரசேகர் ஆக சினிமாவில் அறிமுகமாகி தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி மற்றும் கலைஞரான மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் பாராட்டு பெற்று வாகை சந்திரசேகர் என பெயர் சூட்டப்பட்ட தமிழ்நாட்டின் பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாகைக்குளம் என்ற ஊர் இவருக்கு பிறந்த ஊர். 1956 மே 3, அன்று பிறந்த இவர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் நடிக்க வந்தார். 1980 களில் கதாநாயகன், வில்லன், மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த இவரது தோற்றம் பார்க்க பழகிய பக்கத்து வீட்டுப் பையன் போல் தெரிந்ததே இவரது வெற்றிக்கான பலம் எனலாம்.
இன்னும் சொல்ல போனால் நமது சித்தப்பா மாமா போன்ற சொந்தங்களை இவரது உருவம் நம்மிடையே கடத்தும். . சினிமாவில் அதிகம் நண்பராக ஒரு துணை பாத்திரத்தில் வந்தாலும் அது அப்படத்தின் வெற்றிக்கு காரணமாகிவிடும். இவரது தத்ரூபமான நடிப்பும் பேசப்படும்.
பின்னாளில் சில படங்களில் வில்லத்தனம் கூடிய தோற்றத்தில் வந்த இவர் அதிலும் தன்னை வெகு அழகாக பொருத்திக் கொண்டவர். சின்ன பாத்திரமாக இருந்தாலும் அதில் தனது முத்திரையை பதித்தவர். திரையில் தோன்றும் போதெல்லாம் தன்னை நோக்கி பார்வையாளர்களை இழுத்து விடும் அளவுக்கு தெள்ளத்தெளிவான குரல் வசீகரம் மற்றும் மொழித்திறன் படைத்தவராக இருந்தவர்.
"பாலைவன சோலை" தமிழ்த் திரையுலகில் ஒரு தனித்துவமான ட்ரெண்ட்டை உருவாக்கிய படம் . அதில் நான்கு நண்பர்களில் ஒருவராக தாடியுடன் வரும் இவர் முதன்மை பாத்திரத்தில் நம்மைக் கவர்ந்தார். கள்ளக்கபடமில்லாமல் முகம் முழுக்க சிரிக்கும் இவரது வித்யாசமான கதாபாத்திரங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.
கதாநாயகனக்குரிய அம்சமான தோற்றமின்றி சாதாரண உடல் அமைப்பில் எவரும் ஹீரோவாக ஆகலாம் என்று நிரூபித்ததில் தனுஷ்க்கு முன்னோடி சந்திரசேகர் எனலாம்.
சான்றாக, அப்படத்தில் வரும் "ஆளானாலும் ஆளு" பாடலுக்கு ஆட்டமும் பாட்டமுமாக, ஒரு சாதாரண மனிதனின் கூச்ச உணர்வோடு நால்வரோடு ஆடியும் ஆடாமலும், வெவ்வேறு முக பாவனைகளால் கவர்வார் சந்திரசேகர். அதே படத்தில் வரும் "மேகமே மேகமே" பாடல் வாழ்நாள் வரம் எனலாம். புல் மைதானத்தில் சுஹாசினி சோகமாய் தன் கதையைப் பாட, நெடுந்தொலைவிலிருந்து புதிரான காதல் ததும்ப, புரிந்தும் புரியாமலும் அதைக் கேட்டுக்கொண்டே அவரை உற்று நோக்கும் காட்சியையும் அந்தப் பாடலையும் சினிமா பிரியர்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
அடுத்து "நிழல்கள்" மிக முக்கியமான படமாக அமைந்தது. "மடை திறந்து தாவும் நதி அலை நான்... மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்..." எனும் பாடல் இப்போது வரை கலைத்துறையில் மட்டுமல்லாமல், பொது வாழ்விலும் வெற்றி வாகை சூட நினைக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் உந்துசக்தியான பாடலாக இருக்கிறது. அதில் வரும் சந்திரசேகரின் கனவுகள் நிரம்பிய விழிகள் எளிதில் மனதை விட்டு அகலாது.
இவர் சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 'நண்பா நண்பா' படத்திற்காகப் பெற்ற தேசிய விருது உட்பட பல விருதுகளையும் வென்றிருந்தாலும் சமூகச் செயல்பாடே தனது முதல் ஆர்வமாக இருந்தது என்று கூறியுள்ளார்.
'1975-ல் நாடகம் மற்றும் திரைப்படத் துறைகளில் நுழைவதற்கு முன்பே, நான் 1967-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றிருந்தேன், மேலும் பெரியார் இயக்கத்திலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். என்னை ஒரு நடிகர் என்று சொல்லிக்கொள்வதை விட, என்னை ஒரு திமுக ஆள் என்று சொல்லிக்கொள்வதிலேயே நான் பெருமைப்படுகிறேன்" என ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் தான் முற்போக்கு சிந்தனையாளரான சந்திரசேகர் நடிப்பைத் தாண்டி அரசியலிலும் தடம் பதித்து கவனம் பெற்றார். அவர் கொள்கை சார்ந்து தி.மு.க கட்சியில் தீவிரமாக இயங்கி வருகிறார். கட்சியின் முக்கிய பேச்சாளராக களப்பணி ஆற்றிய அவர் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வேளச்சேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் (MLA) தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியும் ஆற்றியது குறிப்பிடத்தக்கது.
கலைகளைப் பாதுகாக்கவும், கலைஞர்களின் நலன்களை மேம்படுத்தவும் தமிழக அரசால் செயல்படும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தற்போதைய தலைவராகவும் வாகை சந்திரசேகர் செயல்பட்டு வருகிறார்.
நாடகத் துறை மற்றும் பாரம்பரிய கலைகளில் இவரது நீண்டகால பங்களிப்பைக் கெளரவிக்கும் வகையில் தற்போது இந்த யுவ புரஸ்கார் விருது வழங்கப்படுவது வெகு பொருத்தமானது என கலையுலகினர் அவரைப் பாராட்டி வருகின்றனர்.