

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், கடந்த 2024-இல் பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினார். கட்சித் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் விஜய், தனது கடைசி படமான ஜனநாயகனுக்குப் பிறகு, முழுநேர அரசியல்வாதியாக மாறவுள்ளார். இன்னும் ஒரு தேர்தலைக் கூட சந்திக்காத விஜய்க்கு, மககள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து மற்ற கட்சியினர் ஆச்சரியத்தில் உள்ளனர்.
இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், விஜய்யை நான் இன்னும் முழு அரசியல்வாதியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யை குறித்து பேச வேண்டுமென்றால், ஒரு நாள் கூட போதாது என ஆவேசமாக பேசியுள்ளார்.
நடிகர் சரத்குமார் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோர் நடித்து கொம்புசீவி என்ற படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் ப்ரமோஷன் வேலைகளுக்காக இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது, விஜய்யை பற்றி பத்திரிகையாளர்கள் சரத்குமார் இடம் கேள்வி கேட்டனர். விஜய்க்கு நீங்கள் தரும் அறிவுரை என்ன? அரசியல்வாதியாக அவருடைய செயல்பாடுகள் எப்படி இருக்கிறது உள்ளிட்ட பல கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன.
பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சரத்குமார், “ஒரு நடிகராக விஜய் பல்வேறு சாதனைகளைப் புரிந்து விட்டார். அவர் ஒரு வளர்ந்த நடிகர். அவருக்கு நான் அறிவுரை சொல்ல ஏதுமில்லை. ஆனால் அரசியல்வாதியாக தற்போது தான் அவர் களத்தில் நுழைந்துள்ளார். இந்நிலையில் அவருடைய செயல்பாடுகள் எப்படி இருக்கும், அவருடைய கொள்கைகள் எப்படி இருக்கும் என்பது பற்றி இனி தான் தெரிய வரும்.
குறிப்பாக அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை மக்கள் மத்தியில் பேசி வருகிறார். இது வெறும் பேச்சு தான். ஆனால் அதனை எப்படி செய்வார்? ஏதேனும் திட்டம் இருக்கிறதா என்று தான் நான் கேட்பேன். விஜய்யை பற்றி பேச வேண்டுமென்றால் ஒருநாள் முழுக்க பேசலாம். அவர் சொல்லும் கருத்துகளை பற்றி விவாதிக்க வேண்டுமென்றால் பெரிய அளவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த வேண்டும். ஆனால், அதற்கெல்லாம் என்னிடம் நேரம் கிடையாது. ஏனெனில் நான் அவரை இன்னும் அரசியல்வாதியாக ஏற்றுக் கொள்ளவில்லை.
தேர்தல் வரும்போது தான் அவருக்கான மதிப்பு என்ன என்பது தெரிய வரும். தமிழ்நாடு அரசு 10 லட்சம கோடி கடனில் இருக்கிறது. அவர் தனது திட்டத்தைப் பற்றி தான் பேச வேண்டும். மக்களைப் பற்றி அல்ல. விஜய் தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்சினைகளை மட்டுமே சொல்கிறார்.
ஆனால் பிரச்சனைகளை மட்டும் சொல்லி என்ன பயன் இருக்கிறது. அதற்கான தீர்வுகளை அவர் வழங்க வேண்டும். யாராக இருந்தாலும் சரி, தீர்வுகளை தான் எதிர்பார்ப்பார்கள். நானும் அதைத்தான் கேட்பேன்.
விஜய் சொல்லும் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு? என்ன திட்டம் அவரிடம் இருக்கிறது என்பதைத்தான் நானும் கேட்பேன். தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்சினைகளை எப்படி சரி செய்வார் என்பதை குறித்து அவர் விளக்கினால், நானும் மகிழ்ச்சி அடைவேன்; மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள். விஜய் தற்போது தான் அரசியலுக்குள் நுழைந்துள்ளார்.
அவரை விடவும் பெரிய தலைவர்களும், பெரிய கட்சிகளும் தமிழ்நாட்டில் உள்ளன. பெரிய தலைவர்களைப் பற்றி கேட்டால், நான் பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன். விஜய் பற்றி சொல்ல தற்போது ஏதுமில்லை. பத்திரிகையாளர் தான் விஜய்யை பிரபலமாக்கி விடுகிறார்கள். மக்கள் கூட்டத்தை காண்பிப்பதும் பத்திரிகையாளர்கள் தான். விஜய் தேர்தலை சந்திக்கட்டும்; அதன்பிறகே அவரைப் பறறி நாம் பேச வேண்டும். நானும் சினிமாவில் இருந்து தான் அரசியலுக்கு வந்துள்ளேன்” என சரத்குமார் ஆவேசமாக தெரிவித்தார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி சமத்துவ மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை நடிகர் சரத்குமார் தொடங்கினார். இந்த கட்சியின் மூலம் அரசியல்வாதியாக தமிழக அரசியலில் களம் கண்டார் சரத்குமார். ஒரு நடிகராக ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, அரசியல்வாதியாக இவருக்கு மக்கள் மத்தியில் கிடைக்கவில்லை.
கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தனது கட்சியை பாஜகவுடன் இணைத்து கொண்டார் சரத்குமார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய விஜய் குறித்து, கேட்கப்பட்ட கேள்வியில், அவரை நான் இன்னும் அரசியல்வாதியாகவே ஏற்றுக்கொள்ளவில்லை என சொல்லியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.