

ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் இல்ல திருமண விழா, அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. தஞ்சாவூரில் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையில் நடைபெறவிருக்கும் விழாவில் டி.டி.வி தினகரனோடு சசிகலாவும் கலந்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.
அ.தி.மு.கவில் எழுந்த ஒற்றைத் தலைமை கோரிக்கை பின்னர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். கடந்த ஓராண்டாக சட்டப்போராட்டத்தை தன்னுடைய ஆதரவாளர்களுடன் தொடர்ந்து நடத்தி வருகிறார். கடந்த மாதம் டி.டி.வி தினகரனை சந்தித்துப் பேசியவர், அ.தி.மு.கவை மீட்பதில் இணைந்து செயல்படவிருப்பதாக அறிவித்திருந்தார். அடுத்த கட்டமாக சசிகலாவை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய ஆதரவாளரான ஒரத்தநாடு வைத்திலிங்கத்தின் இல்லத் திருவிழாவை முன்னிட்டு சந்திப்பு உறுதியாகியிருக்கிறது. அ.தி.மு..கவின் முன்னாள் ராஜ்யசபா எம்.பியும் அமைச்சருமான வைத்திலிங்கம் மகன் திருமணம் வருகிற 7-ந் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது. இதற்கான திருமண அழைப்பிதழை தருவதற்காக சசிகலாவை சந்தித்தார்.
திருமண விழாவில் டி.டி.வி தினகரனும் வரவிருப்பதாகவும், அதே விழாவில் சசிகலா, டி.டி.வி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் என மூவரும் சந்தித்து பேசவிருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கேரளாவில் தங்கியிருந்த ஊர் திரும்பினார். அங்கிருந்து சென்னை வந்துவிட்டு, அடுத்து வாரம் நடைபெறவிருக்கும் தஞ்சாவூர் திருமண விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.
ஒரு திருமண விழா, மூவரையும் இணைத்து ஓரணியில் நிறுத்தினால் எடப்பாடிக்கு எதிரான அ.தி.மு.கவின் அதிருப்தியாளர்கள் ஒன்றுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூவரும் இணைந்தால் மட்டுமே பா.ஜ.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளமுடியும் என்கிற நிலையில் இதுவொரு முக்கியமான திருப்புமுனையாக இருக்கப்போகிறது.