இந்தியா உட்பட 14 நாடுகளுக்கு சவுதி அரேபியா தற்காலிகமாக விசா தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு சவுதியில் வெப்ப அலை கடுமையாக இருந்தது. இதற்கு முன்னதாகவே ஐநாவும் உலக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதாவது, உலகில் அடுத்த 20 ஆண்டுகளில் வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஸியஸ் அளவுக்கு உயரப் போகிறது என்று கூறியது.
உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான ஹஜ், இஸ்லாமியர்களின் ஐந்து தூண்களில் ஒன்றாகும். அனைத்து இஸ்லாமியர்களும் ஒரு முறையாவது இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மெக்காவில் உள்ள ஹஜ்ஜிற்கு பயணம் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு சுமார் 18 லட்சம் பேர், புனித யாத்திரைக்காக மெக்காவிற்கு வருவார்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அங்கு சென்ற ஆண்டு வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை (104 டிகிரி பாரன்ஹீட்) தாண்டியது.
இந்த கடுமையான வெயிலால் சுமார் 1000 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தவகையில் இந்த ஆண்டு விரைவில் ஹஜ் புனித யாத்திரை தொடங்கவுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க அந்த நாட்டு அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கூடுதல் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கத்தோடு 14 நாடுகளுக்கு விசா தடையை விதித்துள்ளது அந்த நாடு. அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து, இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கான குடும்ப மற்றும் வணிக விசாக்கள் ஹஜ் முடியும் வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன.
ஏப்ரல் 13 வரை விசா வழங்கல் தொடரும் என்றும், அதன் பின் ஹஜ் முடியும் வரை குறிப்பிட்ட நாடுகளுக்கு விசா தரப்படாது என்றும் அவுதி அரேபியா அறிவித்துள்ளது.
பதிவு இல்லாமல் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களைத் தடுக்கும் நோக்கத்தோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.